ஒரு நடிகரின் வெற்றியை ரசிகர்கள் திரையில் மட்டுமே பார்ப்பார்கள். ஆனால் அந்த வெற்றிக்குப் பின்னால் இருக்கும் தியாகங்களையும், குடும்பத்திற்காக அவர் செய்த சமரசங்களையும் நெருங்கியவர்கள் மட்டுமே உணர முடியும். அந்த வகையில், நடிகர் செந்தில் குறித்து அவரது மகன் பகிர்ந்துள்ள நினைவுகள் பலரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளன. 80 மற்றும் 90-களில் தமிழ் சினிமாவின் நகைச்சுவை உலகில் தனக்கென ஒரு இடத்தை உருவாக்கியவர் நடிகர் செந்தில். குறிப்பாக கவுண்டமணியுடன் இணைந்து அவர் நடித்த காமெடி காட்சிகள் காலம் கடந்தும் ரசிகர்களால் ரசிக்கப்பட்டு வருகின்றன.
அவர்கள் இணைந்த ஒவ்வொரு படமும் ரசிகர்களுக்கு சிரிப்பு விருந்தாக அமைந்ததால், தமிழ் சினிமாவின் சிறந்த நகைச்சுவை கூட்டணிகளில் ஒன்றாக அவர்கள் இன்று வரை பேசப்படுகின்றனர். செந்தில் தனது குடும்ப வாழ்க்கையை 1984-ஆம் ஆண்டு கலைச்செல்வியுடன் தொடங்கினார். இந்த தம்பதிக்கு மணிகண்ட பிரபு மற்றும் ஹேமச்சந்திர பிரபு என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். இதில் மூத்த மகனான மணிகண்ட பிரபு தற்போது மருத்துவராக பணியாற்றி வருகிறார்.
அண்மையில் அளித்த பேட்டியில் தந்தை குறித்து பேசிய மணிகண்ட பிரபு, சிறுவயதில் தங்களுக்குள் இருந்த ஒரு குழப்பத்தை பகிர்ந்து கொண்டார். திரைப்படங்களில் தந்தை எப்போதும் அடிபடும் கதாபாத்திரங்களிலேயே நடிப்பதை பார்த்து, “ஒரு முறையாவது திருப்பி அடிக்கும் ஹீரோ மாதிரி நடிக்க முடியாதா?” என்று தாங்கள் அடிக்கடி கேட்டதாக அவர் கூறினார். அப்போது செந்தில், “ஒரு கதாபாத்திரம் எப்படி இருக்க வேண்டும் என்பதை இயக்குநர்தான் முடிவு செய்வார். அவர் நினைத்ததை மாற்றச் சொல்ல முடியாது. எனக்குக் கொடுக்கப்பட்ட வேலையைச் சிறப்பாகச் செய்வது தான் என் பொறுப்பு” என்று எளிமையாக பதிலளிப்பார் என்றும் அவர் தெரிவித்தார்.
அந்த பதில் சிறுவயதில் சாதாரணமாகத் தோன்றினாலும், இன்று அதன் உண்மையான அர்த்தம் புரிகிறது என்று மணிகண்ட பிரபு கூறினார். குடும்பத்தின் தேவைகள், பிள்ளைகளின் எதிர்காலம் மற்றும் பொறுப்புகளை மனதில் வைத்தே, எந்த கதாபாத்திரம் கிடைத்தாலும் அதை முழு ஈடுபாட்டுடன் ஏற்று நடித்துள்ளார். திரையில் அடிவாங்கும் கதாபாத்திரங்கள் அவருக்கு அவமானமாக இல்லை; குடும்பத்தை முன்னேற்றிய பொறுப்பாகவே அதை பார்த்தார் என்பதுதான் இப்போது புரிகிறது என்று அவர் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்தார்.
மகனின் இந்த உருக்கமான பேச்சு சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், நடிகர் செந்திலின் எளிமையும் தொழில் அர்ப்பணிப்பும் குறித்து ரசிகர்கள் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
Also Read: ஸ்பூனில் சாப்பிடுறீங்களா? கையால் சாப்பிடுவதில் இருக்கும் ஆரோக்கிய நன்மைகளை முதலில் தெரிஞ்சுக்கோங்க!



