புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே மல்லாங்குடி கிராமத்தைச் சேர்ந்த பழனிவேலு (55) என்பவர் தனது மனைவி மகாலட்சுமி (44), மகள்கள் தமிழ்செல்வி (25), சாரதா (20) ஆகியோருடன் வசித்து வந்தார். குடும்ப தகராறு காரணமாக கணவன்–மனைவிக்கு இடையே அடிக்கடி சண்டைகள் நடந்ததாக தெரிகிறது.
சில நாட்களுக்கு முன் திடீரென பழனிவேலு காணாமல் போனார். இதுகுறித்து அவரது சகோதரி காவிரி, மகாலட்சுமியிடம் கேட்டபோது, “பழனிவேலுவுக்கு கொழுப்பு கட்டிகள் இருப்பதால் கோவையில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்” என கூறியுள்ளார்.
ஆனால் பல நாட்களாகியும் பழனிவேலுவை தொலைபேசியில் தொடர்பு கொள்ள முடியாததால், காவிரிக்கு சந்தேகம் ஏற்பட்டது. சுமார் 50 நாட்கள் கடந்தபின்பும் எந்த தகவலும் இல்லாததால், அவர் நமணசமுத்திரம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு, மகாலட்சுமியை அழைத்து வந்து தொடர்ந்து விசாரித்தனர்.
விசாரணையின் போது அவர் கூறிய பதில்களில் முரண்பாடு இருப்பதை போலீசார் கவனித்தனர். தொடர்ந்து விசாரணை நடத்தியதில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளிச்சத்திற்கு வந்தது. மகாலட்சுமி அளித்த வாக்குமூலத்தில், “எனக்கும் கணவன் பழனிவேலுவுக்கும் இடையே கடுமையான தகராறு ஏற்பட்டது. அவர் என்னை திட்டியபோது ஆத்திரத்தில் அவரை தள்ளி விட்டேன். அதில் அவர் கீழே விழுந்து உயிரிழந்தார்.
பின்னர் பயத்தில், அவரது உடலை வீட்டின் பின்புறத்தில் உள்ள கழிவறையில் குழிதோண்டி புதைத்தேன். நடந்தது வெளியே தெரியாமல் இருக்க கோவையில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என அக்கம் பக்கத்தில் கூறினேன்” என தெரிவித்தார். அவரது மகள்கள் தமிழ்செல்வி, சாரதா ஆகியோரும் உடலை புதைப்பதில் உதவியாக இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து மகாலட்சுமி மற்றும் அவரது இரு மகள்களையும் போலீசார் கைது செய்து, பழனிவேலுவை புதைத்த இடத்தை சென்று ஆய்வு செய்தனர். உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Read more: அரசு நிகழ்ச்சியில் இனி பிளாஸ்டிக் பாட்டில்களுக்கு தடை..!! முதல்வர் போட்ட அதிரடி உத்தரவு..!!



