தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை பல கட்சியில் இருந்து வந்தவர் என்பதால் அவருக்கு காங்கிரஸ் கட்சி மீது விசுவாசம் இல்லை, திமுகவை தான் தாங்கி பிடிக்கிறார் என இபிஎஸ் விமர்சனம் செய்திருந்தார்.. இந்த நிலையில் இது குறித்து செய்தியாளர்கள் செல்வப்பெருந்தகையிடம் கேள்வி எழுப்பினர்.. அதற்கு பதிலளித்த அவர் “ காங்கிரஸை பற்றி இபிஎஸ் ஏன் கவலைப்பட வேண்டும்? நான் காங்கிரஸ் மீது விசுவாசமாக இருக்கிறேனா இல்லையா என்பது என் தொண்டர்களுக்கு தெரியும்.. என் தலைவர்களுக்கு தெரியும். முதலில் இபிஎஸ் அதிமுக மீது விசுவாசமாக இருக்கிறாரா?
அந்த கட்சியை ஆரம்பித்தவர் எம்.ஜி.ஆர். அந்த கட்சியை தூக்கிய நிறுத்தியவர் ஜெயலலிதா.. எம்.ஜி.ஆர், ஜெயலலிதா இருவரையும் பாஜக விமர்சித்தனர்.. எம்ஜிஆரை பற்றி பேசக் கூடாததை எல்லாம் பேசினார்கள். ஜெயலலிதா தண்டனை பெற்றவர், ஊழல்வாதி, சிறைக்கு சென்றவர் என்றெல்லாம் பேசினார்கள்.. அந்த கட்சியுடன் அதிமுக கூட்டணி வைக்கலாமா? முதலில் அதிமுகவுக்கு அவர் விசுவாசமாக இருக்கட்டும்.. அதன்பின்னர் மற்ற கட்சிகளை பற்றி பேசட்டும்.. எங்களை பற்றி பேசுவதற்கு எந்தவித தகுதியும் அருகதையும் அவருக்கு கிடையாது.
நாங்கள் எப்படியும் கட்சியை நடத்துகிறோம் என்பது எங்களுக்கு தெரியும். இபிஎஸ் திமுக கூட்டணி பற்றி என்ன கவலை? முதலில் அதிமுக கூட்டணி பற்றியும், அதிமுக கட்சியை பற்றி இபிஎஸை கவலைப்பட சொல்லுங்கள்.. அவரின் கட்சியில் இருந்து தான் பல தலைவர்கள் வெளியேறி வருகின்றனர்.. அவருக்கு ஏன் எங்கள் கட்சியை பற்றியும் எங்கள் கூட்டணியை பற்றியும் அவ்வளவு பெரிய கவலை. எங்களுக்கு காங்கிரஸ் மீது விசுவாசம் இல்லை எனில், அவருக்கு அதிமுக மீது விசுவாசம் இருக்கா? என்று சரமாரியாக கேள்வி எழுப்பினார்..