கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே தம்மத்துக்கோணம் பகுதியில் உள்ள விஐபி கார்டன் பகுதியில் யூடியூபர் மதுமிதா தனது கணவர் வினோத்குமார் மற்றும் குழந்தையுடன் வசித்து வருகிறார். சமூக வலைதளங்களில் தொடர்ந்து வீடியோக்கள் மற்றும் தினசரி அப்டேட்களை வெளியிட்டு வரும் இவர், தனது நகைகள் குறித்தும் பல்வேறு பதிவுகளை பகிர்ந்து வந்துள்ளார்.
சம்பவத்தன்று மதுமிதா குடும்பத்தினருடன் ஷாப்பிங் சென்றிருந்ததாக தெரிகிறது. நீண்ட நேரத்துக்குப் பிறகு இரவு வீட்டுக்குத் திரும்பியபோது, வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.
இதையடுத்து வீட்டுக்குள் சென்று பார்த்தபோது, ரகசிய அறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த நகைகள் மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. சுமார் 118 சவரன் தங்க நகைகள் திருடப்பட்டதாக மதுமிதா ராஜாக்கமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் மற்றும் பணத்தின் மொத்த மதிப்பு சுமார் ரூ.1 கோடி என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புகாரைத் தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அன்சூர் நாகர் உத்தரவின்பேரில் கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் தடயவியல் நிபுணர்கள் மற்றும் கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்டனர். வீட்டில் பதிவாகியிருந்த கைரேகைகள் உள்ளிட்ட தடயங்கள் சேகரிக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.
கொள்ளை நடந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களின் காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். சம்பவ நேரத்தில் அந்தப் பகுதியில் பதிவான செல்போன் தொடர்பான தகவல்களும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன. இதன் மூலம் கொள்ளையர்களை அடையாளம் காணும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
இதற்கிடையில், மதுமிதா சமூக வலைதளங்களில் வெளியிட்டிருந்த பழைய வீடியோக்களும் தற்போது கவனம் பெற்றுள்ளன. தனது நகைகள் குறித்தும், அவற்றை வாங்குவது தொடர்பாகவும் அவர் அவ்வப்போது வீடியோக்களில் பேசியிருந்தார். குறிப்பாக, தொடர்ந்து நகைகள் வாங்குவது குறித்து தனது பார்வையாளர்களிடம் பகிர்ந்து வந்துள்ளார்.
மேலும், சில மாதங்களுக்கு முன்பு சுசீந்திரம் கோவில் தொடர்பான வீடியோ ஒன்றை வெளியிட்ட விவகாரத்திலும் மதுமிதா சர்ச்சையில் சிக்கியிருந்தார். தொடர்ந்து சமூக வலைதளங்களில் தனது அன்றாட நடவடிக்கைகள் தொடர்பான பதிவுகளை வெளியிட்டு வந்த நிலையில், தற்போது அவரது வீட்டில் நடைபெற்ற கொள்ளை சம்பவம் பேசுபொருளாகியுள்ளது.
வீட்டின் அமைப்பு, நகைகள் உள்ளிட்ட தனிப்பட்ட தகவல்களை சமூக வலைதளங்களில் பகிர்வது பாதுகாப்பு ரீதியாக எந்த அளவுக்கு கவனமாக இருக்க வேண்டும் என்ற விவாதத்தையும் இந்த சம்பவம் ஏற்படுத்தியுள்ளது. எனினும், மதுமிதா வெளியிட்ட சமூக வலைதள பதிவுகளுக்கும் இந்த கொள்ளைக்கும் நேரடி தொடர்பு இருப்பது இதுவரை போலீஸ் விசாரணையில் உறுதி செய்யப்படவில்லை.
கொள்ளையர்கள் வீட்டுக்குள் எவ்வாறு நுழைந்தனர், சம்பவத்தில் எத்தனை பேர் ஈடுபட்டனர், கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் மற்றும் பணம் எங்கு கொண்டு செல்லப்பட்டது என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Also Read: ஓராண்டாக மாயமான முதல் மனைவி.. 2-வது மனைவியுடன் சந்தோஷமாக வாழ்ந்த கணவன்; கல்குவாரியில் சிக்கிய அதிர்ச்சி தடயம்!



