ஒடிஷா மாநிலத்தில் உலகின் மிகவும் விலையுயர்ந்த மாம்பழமாகக் கருதப்படும் அரிய “மியாசாகி” மாம்பழத்தை ஒரு விவசாயி வெற்றிகரமாகப் பயிரிட்டு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். ஜப்பானைச் சேர்ந்த இந்த உயர்தர மாம்பழ வகை தற்போது இந்திய விவசாயத் துறையில் பரபரப்பாக பேசப்படுகிறது.
ஒடிசா மாநிலம் மல்கங்கிரி மாவட்டத்தின் தமசா கிராமத்தைச் சேர்ந்த தேபா மட்காமி என்ற விவசாயி, சுமார் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு கிடைத்த மியாசாகி மாங்கன்றை பராமரித்து வளர்த்து வந்துள்ளார். தற்போது அந்த மரம் வெற்றிகரமாகக் காய்க்கத் தொடங்கியுள்ளது.
ஜப்பானின் மியாசாகி மாகாணத்தைச் சேர்ந்த இந்த மாம்பழம் “சூரியனின் முட்டை” என அழைக்கப்படுகிறது. அடர் சிவப்பு கலந்த ஊதா நிறம், அதிக இனிப்பு, சாறு நிறைந்த சதைப்பகுதி மற்றும் தனித்துவமான மணம் ஆகிய காரணங்களால் இந்த மாம்பழம் உலகளவில் மிக உயர்தர பழமாக பார்க்கப்படுகிறது.
சர்வதேச சந்தையில் மியாசாகி மாம்பழத்தின் விலை ஒரு கிலோவுக்கு ரூ.1.5 லட்சம் முதல் ரூ.3 லட்சம் வரை செல்லக்கூடும் என கூறப்படுகிறது. ஜப்பானில் இந்த மாம்பழம் பெரும்பாலும் ஏலங்களில் விற்கப்படுவதுடன், ஆடம்பர பரிசாகவும் வழங்கப்படுகிறது. ஒடிசாவின் வெப்பமான காலநிலையிலும் இந்த மாம்பழம் விளைந்திருப்பது விவசாய நிபுணர்களையே ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. ஒவ்வொரு மாம்பழமும் ஒரு கிலோவுக்கு மேல் எடை கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
ஆனால் இந்த வெற்றியோடு புதிய சிக்கலும் உருவாகியுள்ளது. மாம்பழத்தின் அதிக சந்தை மதிப்பு காரணமாக, திருட்டு அச்சத்தில் விவசாயி இரவு முழுவதும் தோட்டத்தை காவல் காக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மரத்தைச் சுற்றி மூங்கில் வேலி அமைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.



