ஹேர் போடோக்ஸ் என்பது தலை முடியின் வேர் வரை கண்டிஷனிங் செய்யும் ஒரு சீரமைப்பு சிகிச்சையாகும். உடைந்த முடி இழைகளை இந்த சிகிச்சை மூலம் சரி செய்ய முடியும். கெரட்டின் கொண்டு செய்யப்படும் இந்த வகை சிகிச்சையில் முடிகளுக்கு தேவையான புரோட்டீன்கள், பெப்டைடுகள், அமினோ அமிலங்கள், வைட்டமின்கள், வைட்டமின் பி5, கொலாஜன் மற்றும் லிப்பிடுகள் தலை முடியின் ஆழமான சீரமைப்புக்கு பயன்படுத்தப்படுகிறது.
இந்த சிகிச்சையில் ஃபார்மால்டிஹைட் என்ற ரசாயனத்தை பயன்படுத்தி தயாரிக்கப்படுகிறது. இது தலைமுடியை சேதப்படுத்தும் ஒரு மூலப்பொருள் என்றும் கூறப்படுகிறது. இதனால் இந்த திரவம் தலைமுடிக்கு மட்டுமல்லாமல், மொத்த உடல் ஆரோக்கியத்திற்கும் தீங்கு விளைவிக்கும் என்றும் கூறப்படுகிறது. வருடத்திற்கு 3 முறைக்கு மேல் போர்டக்ஸ் செய்யக்கூடாது என தெரிவிக்கும் நிபுணர்கள் அவ்வாறு செய்தால் தலை முடியின் வேர்களுக்கு சேதம் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளதாகவும், தலை முடியில் உள்ள ஈரப்பதம் குறைந்து முடி இழைகள் மெல்லியதாக மாறிவிடும் எனவும் கூறுகின்றனர்.
ஒருமுறை சிகிச்சை செய்து கொள்வதால் அதன் பயன் சுமார் 4 – 6 மாதங்கள் வரை நீடிக்கும் என்று கூறப்படுகிறது. ஆனால் உங்கள் தலைமுடியை நீங்கள் எவ்வாறு கவனித்துக்கொள்கிறீர்கள் என்பதைப் பொறுத்தே அதன் காலம் அமையும். மேலும் கெரட்டின் சிகிச்சை மிகவும் விலை உயர்ந்தது. இதன் விலை முற்றிலும் உங்கள் தலைமுடி அமைப்பை பொறுத்தது என்றாலும், சாதாரணமாக ரூ.4000 முதல் ரூ.10000 வரை செலவாகுமாம். இந்த சிகிச்சையானது விலை உயர்ந்தது மட்டுமல்ல, நேரத்தை எடுத்துக்கொள்ளும் செயலாகும். சிகிச்சை செயல்முறை முடிவதற்கு பொதுவாக 3 முதல் 6 மணி நேரம் எடுத்துக்கொள்ளப்படுகிறது. மேலும் கர்ப்பிணி மற்றும் தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் கெராடின் சிகிச்சையை பெறக்கூடாது என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.