ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா அருகே 19 வயது இளம்பெண், அதே பகுதியைச் சேர்ந்த இளைஞரை காதலித்து வந்துள்ளார். சம்பவத்தன்று அந்த பெண் தனது காதலனுடன் பைக்கில் சென்றுள்ளார். இரவு நேரத்தில் நவ்லாக் அருகே உள்ள பாலாறு மேம்பாலம் பகுதியில் பைக்கை நிறுத்தி சாலையோரத்தில் நின்று பேசிக் கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு வந்த மூன்று இளைஞர்கள், காதல் ஜோடிகளை சுற்றி வலைத்து அவர்களிடம் இருந்த நகைகள் மற்றும் பணத்தை அபகரித்தனர். தொடர்ந்து, காதலனை மூவரும் சரமாரியாக தாக்கினர். நிலைகுலைந்து கீழே விழுந்த காதலனை அங்கேயே விட்டுவிட்டு, இளம்பெண்ணை வலுக்கட்டாயமாக தென்னை தோப்புக்கு இழுத்துச் சென்று மூவரும் சேர்ந்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.
அதிர்ச்சியடைந்த இளம்பெண், காதலனுடன் சேர்ந்து உறவினர்களிடம் சம்பவத்தை தெரிவித்தார். பின்னர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் ராணிப்பேட்டை அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து, குற்றவாளிகளை வலைவீசி தேடினர். இந்நிலையில், சிப்காட் அருகே அவரக்கரை பகுதியை சேர்ந்த மூன்று இளைஞர்கள் சந்தேகத்திற்கிடமாக சுற்றித் திரிந்தபோது போலீசாரால் பிடிக்கப்பட்டனர்.
விசாரணையில், சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் இவர்களே என்பது உறுதியானது. இதையடுத்து, மூவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மயங்கி கிடந்த காதலனையும், கடுமையாக பாதிக்கப்பட்ட இளம்பெண்ணையும் உறவினர்கள் வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுமதித்தனர். தற்போது இருவரும் சிகிச்சை பெற்று வருகிறார்கள். கைதான மூவரிடமும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த சம்பவம் ராணிப்பேட்டை மாவட்டத்தையே அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.
Read more: வட்டி மட்டுமே ரூ.45,459 கிடைக்கும்!அற்புதமான தபால் நிலையத் திட்டம்!