டெல்லியில் இந்த ஆண்டு நடைபெறவுள்ள தசரா விழாவில், ராவணன், கும்பகர்ணன், மேகநாதன் ஆகியோரின் உருவ பொம்மைகளுடன் 30 அடி உயர கரப்பான் பூச்சி உருவ பொம்மையும் எரிக்கப்பட உள்ளது. தூய்மை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் இந்தப் புதிய முயற்சியை விழா ஏற்பாட்டாளர்கள் மேற்கொண்டுள்ளனர்.
டெல்லியின் பிடாம்புரா பகுதியில் நடைபெறும் ராம்லீலா நிகழ்ச்சியை ஸ்ரீ கேஷவ் ராம் லீலா கமிட்டி ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. இந்தக் குழுவின் தலைவரும் பாஜக எம்எல்ஏவுமான அசோக் கோயல், இந்த ஆண்டு கரப்பான் பூச்சி உருவ பொம்மையை எரிக்கும் திட்டத்தை அறிவித்துள்ளார்.
சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்திருப்பதன் அவசியத்தை மக்களுக்கு உணர்த்துவதற்காகவே இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அசோக் கோயல் தெரிவித்துள்ளார். இதனை அரசியல் நோக்கத்துடன் அணுக வேண்டாம் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
ராம்லீலா நிகழ்ச்சியில் ராவணனின் படையில் இடம்பெறும் அசுரர்களில் ஒன்றாகவும் கரப்பான் பூச்சி சித்தரிக்கப்பட உள்ளது. தசரா விழாவின் முக்கிய அம்சமான தீமையை நன்மை வெல்லும் என்ற கருத்துடன், தூய்மை குறித்த செய்தியையும் மக்களிடம் கொண்டு சேர்க்க ஏற்பாட்டாளர்கள் திட்டமிட்டுள்ளனர்.
கரப்பான் பூச்சி என்பது அழுக்கு மற்றும் சுகாதாரமற்ற சூழலைக் குறிக்கும் அடையாளமாகப் பயன்படுத்தப்படுவதாக அசோக் கோயல் விளக்கமளித்துள்ளார். இதன் மூலம் தூய்மை இந்தியா மற்றும் தூய்மை டெல்லி திட்டங்களின் நோக்கத்தை மக்களிடம் கொண்டு சேர்க்க முடியும் என ஏற்பாட்டாளர்கள் கருதுகின்றனர்.
இதற்கிடையில், டெல்லியில் ‘கரப்பான் பூச்சி ஜனதா கட்சி’ (CJP) என்ற அமைப்பு பல்வேறு விவகாரங்களை முன்வைத்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறது. முன்னாள் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு எதிராக முதலில் போராட்டங்களை நடத்திய இந்த அமைப்பு, பின்னர் தேர்தல் வாக்காளர் பட்டியல்களின் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) தொடர்பான புகார்களை முன்வைத்து தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையையும் ஆதரித்தது.
முன்னதாக, நீட் தேர்வு தொடர்பான புகார்கள் மற்றும் பொறுப்பேற்பு கோரிக்கைகளை முன்வைத்து இந்த அமைப்பினர் ஜூன், ஜூலை மாதங்களில் டெல்லி ஜந்தர் மந்தரில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஜூலை 20-ம் தேதி நாடாளுமன்றத்தை நோக்கிப் பேரணியாகச் செல்லவும் முயன்றனர். இதற்கிடையில், தர்மேந்திர பிரதான் தனது மத்திய கல்வி அமைச்சர் பதவியிலிருந்து விலகினார்.
தற்போது வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பான விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் மற்றும் மாணவர் அமைப்புகள் நடத்தும் போராட்டங்களிலும் CJP பங்கேற்று வருகிறது. இந்தப் போராட்டங்களின்போது மாணவர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் உள்ளிட்டோர் தடுத்து வைக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இத்தகைய சூழலில், டெல்லி ராம்லீலா நிகழ்ச்சியில் கரப்பான் பூச்சியின் உருவ பொம்மை எரிக்கப்பட உள்ள அறிவிப்பு கவனத்தை ஈர்த்துள்ளது. இருப்பினும், இந்த முயற்சிக்கும் CJP அமைப்பின் போராட்டங்களுக்கும் நேரடித் தொடர்பு இருப்பதாக ஏற்பாட்டாளர்கள் கூறவில்லை; தூய்மை விழிப்புணர்வே இதன் நோக்கம் என அவர்கள் விளக்கியுள்ளனர்.
Also Read: குடும்பச் செலவைக் குறைக்க ஓர் வாய்ப்பு.. மலிவு விலையில் மளிகைப் பொருட்கள் எங்கே கிடைக்கும்?



