அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி (EPS), ராமநாதபுரம் சட்டமன்றத் தொகுதியில் நடைபெற்ற ‘மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்’ நிகழ்ச்சியில் உரையாற்றினார். இதில் அவர், திமுக ஆட்சியை கடுமையாக விமர்சித்தார். அவர் பேசுகையில், “ஸ்டாலின் குடும்பத்தைத் தவிர வேறு யாராவது திமுக தலைவராக வரமுடியுமா? இது ஜனநாயகம் அல்ல, மன்னர் ஆட்சி போல செயல்படுகிறார்கள்” என்று அவர் குற்றம் சாட்டினார்.
தொடர்ந்து, திமுக ஆட்சியில் வீட்டு வரி 100%, கடைவரி 150% உயர்த்தப் பட்டுள்ளதாகவும், மின் கட்டணம் தொடர்ந்து உயர்வடைந்துள்ளதையும் சுட்டிக்காட்டினார். திமுக ஒரு கார்ப்பரேட் நிறுவனமாக மாறிவிட்டது; மக்களின் பிரச்சனைகளில் அக்கறை இல்லை. கருணாநிதி தனது மகனை வளர்த்தார், ஸ்டாலின் அவரது மகனை. இது மரபணு அரசியல். திமுக ஆட்சியில் சாதி, மதச் சண்டைகள் அதிகரித்து விட்டன. ஆனால் அதிமுக ஆட்சியில் அந்த சிக்கல்கள் இல்லை. சிறுபான்மை மக்களுக்கு பாதுகாப்பு வழங்கிய ஒரே கட்சி அதிமுக தான் என்றார்.
EPS தனது உரையில், முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் மீது திமுக எடுத்த நிலைப்பாட்டையும் சுட்டிக்காட்டினார். இந்த நாட்டின் குடியரசுத் தலைவர் வேட்பாளராக போட்டியிட்ட போது, அப்துல் கலாம் அவர்களை புரட்சித் தலைவி அம்மா தலைமையிலான அதிமுக எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள் ஆதரித்து வாக்களித்தனர். அன்று திமுகவினர் அப்துல் கலாமுக்கு எதிராக வாக்களித்தனர்.
கட்சத்தீவை மீட்க உச்சநீதிமன்றத்தில் புரட்சித் தலைவி அம்மா வழக்கு தொடர்ந்து, அது இன்னும் நிலுவையில் உள்ளது. திமுக மத்தியில் 16 ஆண்டுகள் ஆட்சியில் அங்கம் வகித்தது. அப்போது எல்லாம் மீனவர்கள் பற்றி கவலைப்படவில்லை, கட்சத்தீவை மீட்க போராடவில்லை. கட்சத்தீவை மீட்டுக்கொடுக்க இன்று திமுக கேட்கிறது. மத்தியில் காங்கிரஸ் ஆட்சி நடந்தபோது, அப்போது கருணாநிதி தமிழகத்தில் முதல்வராக இருந்தார்.
அப்போது தான் கட்சத்தீவு தாரைவார்க்கப்பட்டது. கொடுத்ததே அவர்கள் தான், இப்போது மீட்கச் சொல்கிறார்கள். திமுக ஆட்சிக்கு வந்து டாஸ்மாக் துறையில் மட்டும் 40,000 கோடி முறைகேடு செய்துள்ளது. திமுகவின் தாரக மந்திரமே Collection, Corruption, Commission தான். டாஸ்மாக்கில் அதிக பணம் வருவதால், அதை பத்திரமாக கவனித்து வருகிறார்கள்” எனக் குற்றம்சாட்டினார்.
Read more: திமுக உடன் கூட்டணி வைக்கும் தேமுதிக..? கழட்டி விடப்படும் மதிமுக.. ஸ்டாலின் புது வியூகம்