மதுக் கடைகளில் இருந்து மட்டும் 22,000 கோடி ரூபாய்முறைகேடு செய்த ஊழல் பணம் மேலிடத்துக்கு சென்றுள்ளது என எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம் பயணத்தில் திருவண்ணாமலையில் பேசிய எடப்பாடி பழனிசாமி; தமிழகத்தில 6000 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இந்த மதுக் கடைகளில் நாள் ஒன்றுக்கு 1.50 கோடி மது பாட்டில்கள் விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு பாட்டிலுக்கு 10 ரூபாய் அதிகமாக வைத்து விற்பனை செய்யப்படுகிறது. இதன்மூலம் நாள் ஒன்றுக்கு மேலிடத்திற்கு 15 கோடி ரூபாய் வரை சென்றுகொண்டுள்ளது. அப்படி என்றால் மாதத்துக்கு 450 கோடி, வருடத்துக்கு 5,400 கோடி. அந்த வகையில் நான்கு ஆண்டுகளில் மதுக் கடைகளில் இருந்து மட்டும் 22,000 கோடி ரூபாய்முறைகேடு செய்த ஊழல் பணம் மேலிடத்துக்கு சென்றுள்ளது. இப்படிப்பட்ட ஆட்சி தொடர வேண்டுமா?
யாரெல்லாம் கப்பம் கட்டுகிறார்களோ? அவர்களுக்கு பதவி தருகிறார் மு.க. ஸ்டாலின். திமுகவில் யார் அதிகம் கப்பம் கட்டுகிறார்களோ அவர்களுக்கே பாராட்டு கிடைக்கும். திமுகவில் பல போராட்டங்களில் ஈடுபட்டு கட்சியின் வளர்ச்சிக்கு உழைத்தவர்கள் தற்போது ஓரங்கட்டப்பட்டுள்ளனர். போக்குவரத்து, மின்சாரம், கூட்டுறவு, சமூக நலத் துறை என பல துறைகளில் அதிமுக அரசு விருதுகளைப் பெற்றது. இன்று, தமிழகத்தில் பல மருத்துவமனைகளில் மருத்துவர்கள் இல்லை, செவிலியர்கள் இல்லை எனப் புகார்கள் வருகின்றன. கிராமம் முதல் நகரம் வரை நடமாடும் மருத்துவமனைகளை அமைத்தது அதிமுக அரசு.
தமிழகத்தின் கிராமங்களில் 2 ஆயிரம் அம்மா கிளினிக் அமைக்கப்பட்டது. இதனை திமுக அரசு ரத்து செய்துவிட்டது. திமுக ஆட்சியில் ரத்து செய்யப்பட்ட திட்டங்கள், அடுத்த ஆண்டு ஆட்சி அமைத்து மீண்டும் தொடங்கப்படும். அதிமுக ஆட்சியில் விவசாயிகளின் கடன்கள் இரு முறை தள்ளுபடி செய்யப்பட்டன. அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவ கல்லூரியில் படிக்க வேண்டும் என்பதற்காக 7.5% இடஒதுக்கீடு பெற்றுத்தந்தது அதிமுக. மின்கட்டணம் கடுமையாக உயர்ந்துள்ளது. ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்கள் பிரச்னைகளுக்கு முதலில் குரல் கொடுக்கும் கட்சியாக அதிமுக உள்ளது என்றார்.