சமீப காலமாக தமிழகத்தில் திருட்டு, கொலை, கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட சம்பவங்கள் அதிகரிக்க தொடங்கி இருக்கின்றனர்.
இதனால் தமிழக மக்கள் எப்போதுமே ஒருவித பீதியுடனே இருந்து வருகிறார்கள். இது போன்ற சமூக விரோத செயல்களில் ஈடுபடுபவர்களை தடுப்பதற்கு மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக சொன்னாலும், மாநில அரசின் நடவடிக்கை இவர்களிடம் எடுபடவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.
அரசாங்கம் ஒருபுறம் நடவடிக்கை எடுத்துக் கொண்டிருந்தாலும் மறுபுறம் இது போன்ற சமூக விரோத செயல்கள் ஆங்காங்கே நடைபெற்று கொண்டு தான் இருக்கிறது.
அந்த வகையில், ஓசூர் சிவக்குமார் நகர் 9வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் நாகராஜ் இவர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றார். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, அதனை கொண்டாடுவதற்காக தன்னுடைய குடும்பத்தைச் சார்ந்தவர்களுடன் வீட்டை பூட்டி விட்டு தன்னுடைய சொந்த ஊருக்கு போயிருந்தார்.
இந்த நிலையில் தான் நேற்று முன்தினம் அதிகாலை மர்ம நபர்கள் சிலர் அவரது வீட்டின் பூட்டை உடைத்து வீட்டிற்குள் நுழைந்து அங்கே இருந்த பீரோவை உடைத்து இருக்கிறார்கள்.
பீரோ உடைத்த சத்தத்தை கேட்டு அண்டை வீட்டார்கள் எழுந்து வந்து பார்த்தபோது, அந்த வீட்டிற்குள் 3 பேர் இருப்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர், வீட்டின் கதவை வெளிப்புறமாக பூட்டிவிட்டு, மத்திகிரி காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். இதனை தொடர்ந்து, ஆய்வாளர் சாவித்திரி மற்றும் காவல்துறையினர் விரைந்து வந்து, வீட்டின் உள்ளே இருந்த 3 பேரையும் பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
காவல்துறையினரின் விசாரணையில், அந்த வீட்டிற்குள் நுழைந்து திருட முயற்சி செய்தவர்கள் கெலமங்கலம் ஜீவா நகரைச் சார்ந்த முருகன் (38), முதுகான பள்ளியை சேர்ந்த சந்தோஷ் குமார் (26), யாரப் (26) உள்ளிட்டோர்தான் என்பது தெரியவந்தது. அதோடு, நாகராஜின் வீட்டில் யாரும் இல்லாததை நோட்டமிட்டு தெரிந்து கொண்ட அவர்கள், அந்த வீட்டில் முயற்சி செய்ததும் தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து மூவரையும் காவல்துறையினர் கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.