திருப்பூர் அருகே மனைவியை பற்றி குடிபோதையில் தவறாக பேசிய நண்பனை பீர் பாட்டிலால், குத்தி கொன்ற இளைஞரால், பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.
திருப்பூர் அருகே உள்ள காங்கேயம், வெங்கடேஸ்வரா நகர் பகுதியை சேர்ந்த ரபிக்(28) என்பவரும், முகமது இலியாஸ் என்பவரும் நண்பர்களாக பழகி வந்தனர். மேலும், இருவரும் ஒன்றாக மது அருந்துவது வழக்கம் அந்த வகையில், நேற்று இரவு இருவரும் யுனிவர்சல் தியேட்டர் அருகே அமர்ந்து, மது அருந்தி வந்ததாக சொல்லப்படுகிறது.
மது போதையில் இருவரும் உரையாடிக் கொண்டிருந்தபோது, முகமது இலியாஸின் மனைவியை பற்றி ரபிக் தவறாக பேசியதாக சொல்லப்படுகிறது. இதனால், அவர்கள் இருவருக்கிடையே வாக்குவாதம் உண்டானது. ஆகவே, ஆத்திரம் கொண்ட முகமது இலியாஸ், தான் கையில் வைத்திருந்த பீர் பாட்டிலை எடுத்து, ரபிக் தலையில் பயங்கரமாக அடித்திருக்கிறார். அதோடு, ஆத்திரம் குறையாததால், உடைந்த பீர் பாட்டிலைக் கொண்டு, கழுத்து, வயிறு போன்ற பகுதிகளில் சரமாரியாக குத்தியிருக்கிறார் இலியாஸ்.
இதனால் படுகாயம் அடைந்த ரபிக், இரத்த வெள்ளத்தில் அதே இடத்தில் சரிந்து விழுந்தார். மேலும், துடிதுடித்து உயிரிழந்தார். இவர்களின் சத்தம் கேட்டு, அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்ததால், முகமது இலியாஸ் அங்கிருந்து, தப்பிச் சென்றார். இது தொடர்பாக, திருப்பூர் வடக்கு காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன் பெயரில், சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், ரபிக் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த கொலை சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் கொலை செய்து விட்டு, வெளியூருக்கு தப்பி செல்ல முயற்சி செய்த முகமது இலியாசை கைது செய்துள்ளனர்.