நகர்ப்புறங்களில் உள்ள அனைத்து அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளுக்கும் முதல்வரின் காலை உணவு திட்ட விரிவாக்கத்தை சென்னையில் முதல்வர் ஸ்டாலின் வரும் 26-ம் தேதி தொடங்கி வைக்கிறார்.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில்: அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் முதல்வரின் காலை உணவு திட்டத்தை நாட்டிலேயே முதல்முறையாக, மதுரை ஆதிமூலம் மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 2022 செப்டம்பர் 15-ம் தேதி தொடங்கி வைத்தார். மாணவர்கள், பெற்றோரிடம் இந்த திட்டம் பெரும் வரவேற்பை பெற்றது.
இதை தொடர்ந்து, முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த ஊரான திருக்குவளையில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் காலை உணவு திட்ட விரிவாக்கத்தை முதல்வர் ஸ்டாலின் கடந்த 2023 ஆகஸ்ட் 25-ம் தேதி தொடங்கி வைத்தார். இதன்மூலம் 30,992 பள்ளிகளில் பயிலும் 18.50 லட்சம் மாணவ, மாணவிகள் காலை உணவை சூடாக, சுவையாக சாப்பிட்டு, மகிழ்ச்சியுடன் பள்ளிப் பாடங்களில் கவனம் செலுத்தி படித்து வருகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக, கடந்த 2024 ஜூலை 15-ம் தேதி, காமராஜர் பிறந்தநாளில், திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கீழச்சேரி கிராமத்தில் உள்ள புனித அன்னாள் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளியில் முதல்வரின் காலை உணவு திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டு, 3,995 அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளில் பயிலும் 2.24 லட்சம் மாணவ, மாணவிகள் பயனடைந்து வருகின்றனர்.
முதல்வரின் காலை உணவு திட்டத்தால், பள்ளிக்கு வரும் மாணவ, மாணவிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதுடன், குழந்தைகளின் கற்றல் திறனும் மேம்படுத்தப்பட்டு, 90 சதவீதத்துக்கும் அதிகமான குழந்தைகளிடம் முந்தைய பாடங்களை நினைவுகூரும் திறன் அதிகரிப்பதாக ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மாணவ, மாணவிகள் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்படுவது களையப்பட்டதுடன், குழந்தைகளின் ஆரோக்கியமும் மேம்படுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தை பின்பற்றி, தெலங்கானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் தங்களது பள்ளிகளில் காலை சிற்றுண்டி திட்டத்தை தொடங்கியுள்ளன. தமிழகத்தின் காலை உணவு திட்டத்தை கனடா அரசும், தனது நாட்டில் நடைமுறைப்படுத்தியது. இந்நிலையில், நகர்ப்புறங்களில் உள்ள அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளுக்கும் முதல்வரின் காலை உணவு திட்டம் விரிவுபடுத்தப்படும் என்று கடந்த மார்ச் 14-ம் தேதி அறிவிக்கப்பட்டது. அதன்படி, முதல்வரின் காலை உணவு திட்ட விரிவாக்கத்தை சென்னை மயிலாப்பூரில் உள்ள புனித சூசையப்பர் தொடக்கப் பள்ளியில் முதல்வர் ஸ்டாலின் வரும் 26-ம் தேதி தொடங்கி வைக்கிறார். இந்த நிகழ்ச்சியில் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் பங்கேற்கிறார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.