மகாராஷ்டிர மாநிலத்தில் மும்பை நகர்ப்புறம் மற்றும் மும்பை புறநகர் பகுதிகள் தானே, ராய்கட் மற்றும் பால்கர் மாவட்டங்களில் ஜிஎஸ்டிஆர்-3-பி படிவம் தாக்கல் செய்வதற்கான காலக்கெடு இம்மாதம் 27-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக மத்திய மறைமுகம் மற்றும் சுங்கவரி வாரியம் தெரிவித்துள்ளது.
இது குறித்து வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மும்பையில் பல்வேறு இடங்களில் பெய்த கனமழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதைக் கருத்தில் கொண்டு வரி செலுத்துவோர் ஜூலை மாதத்திற்கான கடிதத்தை தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி மும்மை நகர்ப்புறப் பகுதிகள், மும்பை புறநகர் பகுதிகள் தானே, ராய்கட் மற்றும் பால்கர் மாவட்டங்களில் முதன்மை வர்த்தக இடமாக ஜிஎஸ்டி வரிச்சட்டத்தில் பதிவு செய்துள்ள வர்த்தகர்களுக்கு மட்டும் இந்த கால அவகாசம் பொருந்தும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பகுதிகளில் உள்ள வர்த்தகர்கள் இந்தக் கால நீட்டிப்பைப் பயன்படுத்திக் கொண்டு தங்களது படிவங்களை நீட்டிக்கப்பட்டுள்ள காலக்கெடுவுக்குள் தாக்கல் செய்வதன் மூலம் கால தாமதத்திற்கான கட்டணம் மற்றும் அபராதம் செலுத்துவதைத் தவிர்க்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.