பாஜகவை கொள்கை எதிரி என கூறியதால், தேசிய ஜனநாயக கூட்டணியில் தவெக தலைவர் விஜய் இடம் பெற வாய்ப்பில்லை என பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய மஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை: திமுக ஆட்சி தமிழகத்தில் இருந்து அகற்றப்பட வேண்டும் என்பது மட்டுமே நோக்கம். பாஜக 2024-ல் அமைத்த கூட்டணியில் ஒருமித்த கருத்தோடு அனைவரும் வந்தார்கள். தமிழகத்தில் எப்போதும் இல்லாத களச்சூழல் இப்போது இருக்கிறது. எப்போதும், இருமுனை போட்டியாக இருந்த தமிழகத்தில், மூன்றாவது அணி, நான்காவது அணி சாத்தியமா என்பது அடுத்து மூன்று, நான்கு மாதத்தில் தெரியும்.
இன்று களத்தில் ஒற்றுமையாக இருந்து 2026 தேர்தலுக்கு அழைத்துச் செல்ல வேண்டிய கட்டாயம் கடமை அனைவருக்கும் இருக்கிறது. கடந்த சில நாட்களாக கூட்டணியில் நடக்கக்கூடிய நிகழ்வுகள் திருப்தியாக இல்லை. சலிப்பை ஏற்படுத்துகிறது. சரியான பாதையில் தேசிய ஜனநாயக கூட்டணி செல்லும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.
பாஜகவை கொள்கை எதிரி என கூறியதால், தேசிய ஜனநாயக கூட்டணியில் தவெக தலைவர் விஜய் இடம் பெற வாய்ப்பில்லை. புதிதாக ஒரு கட்சியை கூட்டணிக்கு அழைப்பதை விட, இருப்பதை வைத்து, கூட்டணியை எப்படி வலுப்படுத்த வேண்டும் என்பதை தான் பார்க்க வேண்டும் என்றார்.