திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே கொளுந்தியாளை தனக்கே இரண்டாவது திருமணம் செய்து வைக்க கூறிய நபரை பெண்ணின் சகோதரர் வெட்டி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆரணிப்பாளையம் டி.ஆர்.எஸ். நகர் பகுதியைச் சேர்ந்தவர் கணபதி (30). இவர் மோனிஷா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். சில காலமாக கணபதிக்கும் அவரது மனைவி மோனிஷாவுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டதால், மோனிஷா பிரிந்து சென்றார். குழந்தைகளுடன் மோனிஷா தனது சகோதரர் மகேஸ்வரனின் வீட்டில் தங்கியிருந்தார்.
கடந்த வியாழக்கிழமை, ஆரணி அருகே உள்ள மொழுகம்பூண்டி கிராமத்தில் கணபதி பிணமாக கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தகவல் அறிந்த போலீசார் உடலை மீட்டு, வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில், மோனிஷாவின் சகோதரர் மகேஷ்வரன் மது போதையில் கணபதியை வெட்டி கொலை செய்தது தெரியவந்தது.
தகவலின்படி, கணபதி மோனிஷா இருவரும் பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில், மோனிஷாவின் மற்றொரு சகோதரி அதாவது கொழுந்தியாளுடன் கணபதி பழகி வந்துள்ளார். தன்னுடைய கொழுந்தியாளை தனக்கே திருமணம் செய்து வைக்க வேண்டும் என மோனிஷாவின் சகோதரர் மகேஸ்வரனிடம் கணபதி கூறியுள்ளார். இதனால் ஆத்திரத்தில் மகேஸ்வரன் அவரை வெட்டி கொலை செய்தது தெரிய வந்தது. தற்போது போலீசார் மகேஸ்வரனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் இந்த சம்பவம் அந்த பகுதியில் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.