வருவாய் பற்றாக்குறையால் தடுமாறும் தமிழகம்.. உத்தரப் பிரதேசத்தை விட பின்தங்கிய அவலம்..!! – அன்புமணி விமர்சனம்

13507948 anbumani 1

இந்தியாவின் 28 மாநிலங்களில் 16 மாநிலங்கள் வருவாய் உபரி ஈட்டியுள்ள நிலையில், தமிழ்நாடு 27-ஆவது இடத்தில் இருப்பது பெரும் அவமானம் என அன்புமணி ராமதாஸ் கடுமையாக விமர்சித்துள்ளார்.


இதுகுறித்து அன்புமணி அறிக்கையில், இந்தியாவில் உள்ள 28 மாநிலங்களில் 16 மாநிலங்கள் வருவாய் உபரி ஈட்டியிருப்பதாக இந்தியத் தலைமைக் கணக்காயர் அலுவலகம் மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. ஒரு காலத்தில் பின்தங்கிய மாநிலமாகப் பார்க்கப்பட்ட உத்தரப் பிரதேசம் வருவாய் உபரியில் முதலிடம் பிடித்திருக்கிறது. விடியல் ஆட்சி தரப்போவதாகக் கூறி ஆட்சிக்கு வந்த திமுக நிதி நிர்வாகத்தில் தமிழகத்தை 27-ஆம் இடத்திற்கு தள்ளியிருக்கிறது.

நிதி நிர்வாகம் குறித்து பேசுவதற்கு எந்தத் தகுதியும் திமுகவுக்கு இல்லை என்பதையே இந்த ஆய்வு காட்டுகிறது. பத்தாண்டுகளில் அதிகரித்த பொதுக்கடன்” என்ற தலைப்பில் இந்தியாவிலுள்ள மாநிலங்களின் நிலை குறித்த ஆய்வறிக்கையை இந்திய தலைமைக் கணக்காயர் அலுவலகம் தயாரித்து வெளியிட்டுள்ளது. 2013-14ஆம் ஆண்டில் தொடங்கி 2022-23ஆம் ஆண்டு வரையிலான பத்தாண்டுகளில் ஒவ்வொரு மாநிலத்தின் பொருளாதார நிலை எவ்வாறு முன்னேறியிருக்கிறது? வருவாய்ப் பற்றாக்குறை, நிதிப்பற்றாக்குறை ஆகியவற்றின் நிலை என்ன? பொதுக்கடன் எந்த அளவுக்கு அதிகரித்திருக்கிறது? என்பது குறித்த விவரங்கள் அந்த அறிக்கையில் பெற்றுள்ளன.

அதில் அதிர்ச்சியூட்டும் தகவல் என்னவெனில், தமிழ்நாடு உள்ளிட்ட 11 மாநிலங்கள் வாங்கும் கடனில் பெரும் பகுதியை கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த செலவிடுவதற்கு பதிலாக ஊதியம், மானியம் ஆகியவற்றுக்காக செலவிடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது தான். அதாவது திமுக அரசு கடன் வாங்கித் தான் அதன் ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கி வருகிறது.

ஒவ்வொரு மாநில அரசுக்கும் வருவாய் செலவுகள், மூலதனச் செலவுகள் என இரு வகையான செலவுகள் உள்ளன. இவற்றில் ஓர் அரசின் நிர்வாக மற்றும் இயக்கச் செலவுகள் வருவாய் வரவுகளில் இருந்து தான் செய்யப்பட வேண்டும். மூலதனச் செலவுகளுக்காக மட்டும் தான் கடன் வாங்கப்பட வேண்டும் என்பது தங்க விதி(Golden Rule) ஆகும். அப்படியானால் வருவாய் செலவுகள் அனைத்தும் வருவாய் வரவுக்குள் கட்டுப்படுத்தப்பட வேண்டும். அவ்வாறு கட்டுப்படுத்தப்படாமல் வருவாய் செலவுகள் அதிகரித்தால் வருவாய்ப் பற்றாக்குறை ஏற்படும்.

அது மோசமான நிதி நிர்வாகத்தின் அடையாளம். ஒரு மாநிலத்தின் கடன் சுமை அதிகரிப்பதற்கு காரணமே கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு வருவாய்ப் பற்றாக்குறை அதிகரித்துக் கொண்டே செல்வது தான். இந்தியாவில் உள்ள 28 மாநிலங்களில் 16 மாநிலங்கள் வருவாய் செலவுகளை வருவாய் வரவுக்குள் கட்டுப்படுத்தி வருவாய் உபரியை ஏற்படுத்தியுள்ளன. அவற்றில் உத்தரப்பிரதேசம் 2022-23ஆம் ஆண்டில் ரூ.37,000 கோடி வருவாய் உபரியை ஈட்டியுள்ளது.

உத்தரப்பிரதேசத்திற்கு அடுத்தபடியாக குஜராத் (ரூ.19.865 கோடி), ஒதிஷா(ரூ.19,456 கோடி), ஜார்க்கண்ட் (ரூ.13,564கோடி), கர்நாடகம் (ரூ.13,496 கோடி), சத்தீஸ்கர், தெலுங்கானம், உத்தரகாண்ட், மத்தியப்பிரதேசம், கோவா, அருணாச்சலப்பிரதேசம், மணிப்பூர், மிசோரம், நாகலாந்து, திரிபுரா, சிக்கிம் ஆகிய மாநிலங்களும் வருவாய் உபரி ஈட்டியுள்ளன.

அதேநேரத்தில் வருவாய்ப் பற்றாக்குறையுடன் 12 மாநிலங்கள் தடுமாறுகின்றன. அவற்றில் ஆந்திரத்துக்கு அடுத்தபடியாக வருவாய்ப் பற்றாக்குறை அதிகமுள்ள மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. 2022-23ஆம் ஆண்டில் தமிழகத்தின் வருவாய்ப் பற்றாக்குறை ரூ.36,215 கோடியாக உள்ளது. நிதி நிர்வாகத்தின் அடிப்படையில் பார்த்தால் உத்தரப்பிரதேசம் முதலிடத்தில் உள்ள நிலையில் தமிழ்நாடு 27-ஆம் இடத்தில் உள்ளது. இது திமுக அரசின் பெரும்தோல்வியாகும்.

ஒரு காலத்தில் மிகவும் பின்தங்கிய மாநிலங்களாக, பிமாரு மாநிலங்கள் (BIMARU) என அறியப்பட்ட உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம் ஆகியவையும், அவற்றிலிருந்து பிரிக்கப்பட்ட உத்தரகாண்ட், சத்தீஸ்கர், ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்கள் மிகப்பெரிய அளவில் வருவாய் உபரியை ஈட்டுகின்றன. ஆனால், பொருளாதார வளர்ச்சியில் சாதனை படைத்து விட்டதாகக் கூறிக் கொள்ளும் திமுக அரசு, ஆட்சிப் பொறுப்புக்கு வந்து 5 நிதிநிலை அறிக்கைகளை தாக்கல் செய்து விட்ட போதிலும் இன்று வரை வருவாய் பற்றாக்குறைக்கு முடிவு கட்ட முடியவில்லை.

நிதி நிர்வாகத்தை மேம்படுத்த திமுக அரசு எதையும் செய்யவில்லை என்பதையே இது காட்டுகிறது. இந்தியத் தலைமைக் கணக்காயர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இடம் பெற்றுள்ள தகவல்கள் அனைத்தும் 2022-23ஆம் ஆண்டு வரையிலானவை ஆகும். அதற்குப் பிறகும் கூட தமிழகத்தின் நிதிநிலை மேம்படவில்லை; தமிழகத்தின் வருவாய்ப் பற்றாக்குறையும் குறைக்கப்படவில்லை என்பது தான் உண்மை.

வருவாய்ப் பற்றாக்குறையை 2023-24ஆம் ஆண்டில் ரூ.13,582 கோடியாகக் குறைக்க திமுக அரசு இலக்கு நிர்ணயித்திருந்தது; ஆனால், ரூ.37,540 கோடியாக அதிகரித்தது. 2024-25ஆம் ஆண்டில் ரூ.18,583 கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், ரூ.49,278 கோடியாக அதிகரித்து விட்டது. நடப்பாண்டில் வருவாய் பற்றாக்குறையை ஒழித்து, ரூ.1218 கோடி வருவாய் உபரி ஈட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், வருவாய் பற்றாக்குறை ரூ.52,781.17 கோடியாக அதிகரித்து விட்டது.

அதேபோல் நிதிப்பற்றாக்குறையும் ரூ.1 லட்சம் கோடியைத் தாண்டி விட்ட நிலையில், அதை சமாளிக்க அரசு கடனை வாங்கிக் குவிக்கிறது. 2025-26ஆம் ஆண்டில் தமிழ்நாடு மற்றும் உத்தரப்பிரதேசத்தின் நிதிநிலையை ஒப்பிட்டுப் பார்த்தால் தமிழகத்தை திமுக அரசு எவ்வளவு மோசமான நிலைக்கு கொண்டு சென்று நிறுத்தியிருக்கிறது என்பதை அறிந்து கொள்ள முடியும். நடப்பாண்டில் தமிழ்நாடு அதன் வருவாய் செலவினங்களைக் கூட சமாளிக்க முடியாமல் அதற்காக ரூ.ரூ.49,278 கோடி கடன் வாங்க வேண்டிய நிலையில் உள்ளது. ஆனால், உத்தரப்பிரதேசம் அதன் வருவாய் செலவுகளை வரவுக்குள் முடித்து ரூ.79,516 கோடி உபரி வைத்திருக்கிறது.

அதனால், ரூ.91,400 கோடியை மட்டும் கடனாக வாங்கும் உத்தரப்பிரதேச அரசு, அதனிடம் உள்ள வருவாய் உபரியையும் சேர்த்து ரூ.1.65 லட்சம் கோடியை மூலதனச் செலவுகளுக்காக ஒதுக்கி உட்கட்டமைப்பு பணிகளை மேற்கொள்கிறது. ஆனால், நடப்பாண்டில் ரூ.1,06,251 கோடியை கடனாக வாங்கி, வருவாய்ப் பற்றாக்குறையை உள்ளிட்ட செலவுகளை சமாளித்து மூலதனச் செலவுகளுக்காக ரூ.57,230.96 கோடியை மட்டும் தான் ஒதுக்குகிறது. ஒரு மாநிலத்தின் வளர்ச்சிக்கு உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட வேண்டியது தான் அவசியமாகும்.

அதற்காக தமிழக அரசு செலவழிக்கும் ரூ.57,230 கோடியை விட 3 மடங்கு, அதாவது ரூ.1,65,243 கோடியை உத்தரப்பிரதேசம் செலவழிக்கிறது. ஒரு காலத்தில் உலக நாடுகளுடன் போட்டியிடும் நிலையில் இருந்த தமிழ்நாட்டை உத்தரப்பிரதேசத்திடம் படுதோல்வி அடையும் நிலைக்கு ஆளாக்கியிருப்பது தான் திராவிட மாடல் ஆட்சியின் சாதனையாகும். தமிழ்நாட்டை இவ்வளவு மோசமான நிதிச்சீரழிவுக்கு உள்ளாக்கிய திமுக அரசுக்கு வரும் தேர்தலில் தமிழ்நாட்டு மக்கள் மறக்க முடியாத அளவுக்கு பாடம் புகட்டுவார்கள்” என அதில் கூறப்பட்டுள்ளது.

Read more: மற்றவர்களின் மனதை பிணமாக்கி அதை கொத்தித் தின்னும் கேவலப் பிறவியாக வாழ வேண்டுமா? நடிகர் பார்த்திபன் காட்டம்.. என்ன விஷயம்?

English Summary

Tamil Nadu is struggling due to revenue deficit.. It is a pity that it is lagging behind Uttar Pradesh..!! – Anbumani

Next Post

கஜகேசரி ராஜ யோகம்.. பணத்தை அள்ளப்போகும் 5 ராசிகள்.. செல்வம், புகழ் பெருகும்!

Tue Sep 23 , 2025
நவராத்திரியின் முதல் நாளான நேற்று, சுக்ல யோகமும் சர்வார்த்த சித்தி யோகமும் கஜகேசரி யோகத்துடன் இணைந்திருப்பதால் சிறப்பு வாய்ந்தது. குரு மற்றும் சந்திரனின் இணைப்பால் உருவாகும் இந்த கஜகேசரி யோகம், இந்த நாளில் 5 முக்கிய ராசிக்காரர்களுக்கும் பெரும் நன்மைகளைத் தரும். மேஷம் இந்த ராசிக்காரர்கள் அரசாங்க வேலைகளில் வெற்றி பெறுவார்கள். வேலைத் துறையில் நல்ல சூழலும் சக ஊழியர்களின் ஆதரவும் இருக்கும். நிதி அடிப்படையில், செலவுகளைக் கட்டுப்படுத்த முடியும். […]
raja yogam

You May Like