திருநெல்வேலி மாவட்டம் தருவை பகுதியை சேர்ந்தவர் பாலமுருகன். இவருடைய மனைவி ஸ்ரீ பிரியா. கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி, இரு ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தை என மூன்று குழந்தைகள் உள்ளனர்.
30 வயதான ஸ்ரீபிரியாவிற்கும் அவரது கணவர் பாலமுருகனுக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்த நிலையில், ஸ்ரீபிரியா கோவையில் தனியார் விடுதியில் தங்கி வேலை செய்து வந்தார். அப்போது பாலமுருகனின் உறவினர் இசக்கிராஜா என்பவருடன் ஸ்ரீபிரியாவிற்கு பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. ஸ்ரீபிரியாவுடன் இருக்கும் புகைப்படத்தை இசக்கி ராஜா பாலமுருகனுக்கு அனுப்பி உள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த பாலமுருகன் கோவை வந்துள்ளார். ஸ்ரீபிரியா வேலை செய்யும் நிறுவனத்திற்கு சென்று தகராறு செய்துள்ளார். அப்போது ஸ்ரீபிரியா பாலமுருகனிடம் மன்னிப்பு கேட்டு கெஞ்சியதால் அவரை அங்கே விட்டுவிட்டு உறவினர் வீட்டுக்கு வந்துள்ளார்.
அதன்பின்னர் பாலமுருகனிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய ஸ்ரீ பிரியா இசக்கியுடன்தான் இருப்பேன் என கூறியுள்ளார். உடனே ஸ்ரீபிரியா தங்கிருந்த மகளிர் விடுதிக்கு தனது நண்பரின் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது ஸ்ரீபிரியா காலை உணவருந்துவதற்காக வந்த போது மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து ஸ்ரீபிரியாவின் கழுத்து பகுதியில் ஐந்து இடங்களில் சரமாரியாக வெட்டி கொலை செய்து உள்ளார்.
மேலும் கொலை செய்து விட்டு, காவல் துறையினர் வரும் வரை அங்கிருந்த ஒரு இருக்கையில் கால் மேல் கால் போட்டு அமர்ந்தபடி மனைவியின் சடலத்துடன் செல்ஃபி எடுத்து ‘துரோகத்தின் சம்பளம் மரணம்’ என தனது வாட்ஸ் அப் ஸ்டேடஸ் ஆக வைத்து உள்ளார். சம்பவ இடத்திற்கு வந்த ரத்தினபுரி காவல் நிலைய போலீசார் ஸ்ரீபிரியாவின் சடலத்தை கைப்பற்றியதுடன் அங்கிருந்த சிசிடிவி காட்டிகளையும் பறிமுதல் செய்து விசாரணை செய்தனர்.
தொடர்ந்து பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் பாலமுருகனை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



