அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், செவ்வாய்க்கிழமை தனது சமூக ஊடகத் தளமான ‘ட்ருத் சோஷியல்’ இல், ஐரோப்பிய தலைவர்களுடன் எடுத்துக்கொண்ட பழைய புகைப்படம் ஒன்றை வெளியிட்டார். அந்தப் புகைப்படத்தில், அமெரிக்கக் கொடியின் வடிவில் கனடா, கிரீன்லாந்து மற்றும் வெனிசுலா ஆகியவை அமெரிக்காவின் ஒரு பகுதியாக காட்டப்பட்டிருந்தது.
இந்தப் பதிவில், டிரம்ப் ஓவல் அலுவலகத்தில் அமர்ந்திருக்கும் காட்சியுடன், பிரான்ஸ் அதிபர் எம்யூயல் மக்ரோன், இத்தாலி பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி, பிரிட்டன் பிரதமர் கியர் ஸ்டார்மர், ஐரோப்பிய ஆணையத் தலைவர் உர்சுலா வான் டெர் லெயன் உள்ளிட்ட நேட்டோ தலைவர்கள் அருகில் இருப்பதாகக் காணப்பட்டது.
இதற்குப் பிறகு வெளியிட்ட மற்றொரு பதிவில், டிரம்ப் தனது துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் மற்றும் வெளியுறவுத் துறை செயலாளர் மார்கோ ரூபியோ ஆகியோருடன் சேர்ந்து, கிரீன்லாந்தில் அமெரிக்கக் கொடியை ஏற்றும் காட்சியை வெளியிட்டார். அந்தப் படத்தில், “ கிரீன்லாந்து – அமெரிக்கப் பிரதேசம், 2026ல் நிறுவப்பட்டது(Greenland US Territory Est 2026”) என்று எழுதப்பட்ட ஒரு கிலோமீட்டர் கல் அருகில் அவர்கள் நிற்பது போல காட்டப்பட்டுள்ளது.
இதற்கு முன்னர், வெனிசுலா அதிபர் நிக்கோலாஸ் மடுரோ பிடிபட்டதாக அறிவிக்கப்பட்ட சில நேரங்களில், டிரம்ப், அந்த தென் அமெரிக்க நாட்டை அமெரிக்கா “பாதுகாப்பான, சரியான மற்றும் விவேகமான மாற்றம் நடைபெறும் வரை” நிர்வகிக்கும் என்று கூறியிருந்தார்.
பின்னர், ஜனவரி 8 அன்று வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் கரோலின் லீவிட், இந்த நிலைப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தினார். அவர் கூறுகையில், “டிரம்ப் நிர்வாகம், வெனிசுவேலாவின் இடைக்கால அதிகாரிகளுடன் நெருக்கமாக தொடர்பில் உள்ளது. தற்போது அவர்கள்மீது எங்களிடம் முழு அழுத்தமும் உள்ளது. அவர்கள் எடுக்கும் முடிவுகள் தொடர்ந்து அமெரிக்காவால் தான் தீர்மானிக்கப்படும்,” என்று தெரிவித்தார்.
கடந்த ஆண்டு, கனடா அமெரிக்காவின் 51-வது மாகாணமாக மாற வேண்டும் என்று டிரம்ப் பரிந்துரை செய்திருந்தார். ஆனால், தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர், மே மாதம் தனது முதல் செய்தியாளர் சந்திப்பில் பேசிய கனடா பிரதமர் மார்க் கார்னி, டிரம்பின் இந்த யோசனையை கடுமையாக நிராகரித்தார். “விருப்பங்களையும் நிஜத்தையும் பிரித்துப் பார்க்க வேண்டும் என்பது முக்கியம்,” என்று அவர் கூறினார்.
செவ்வாய்க்கிழமை, டிரம்ப், நேட்டோ பொதுச் செயலாளர் மார்க் ரூட்டே உடன் தொலைபேசி மூலம் பேசினார். அந்த உரையாடலில் கிரீன்லாந்து குறித்து விவாதிக்கப்பட்டதாகவும், டாவோஸில் நடைபெற உள்ள உலக பொருளாதார மன்றத்தில் பல தரப்பினரை சந்திக்க இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். கிரீன்லாந்து, அமெரிக்காவின் பாதுகாப்புக்கும் உலகளாவிய பாதுகாப்புக்கும் மிக முக்கியமான பகுதியாகும் என்ற தனது நிலைப்பாட்டை அவர் மீண்டும் வலியுறுத்தினார்.
இதனிடையே, டிரம்பின் இந்த பதிவுகள் வெளியான சில மணி நேரங்களுக்குப் பிறகு, வட அமெரிக்க வான்வழி பாதுகாப்பு அமைப்பான NORAD, அமெரிக்கா கிரீன்லாந்தில் உள்ள முக்கிய ராணுவத் தளமான பிடூஃபிக் விண்வெளி தளத்திற்கு (Pituffik Space Base) ராணுவ விமானங்களை அனுப்பத் தயாராக இருப்பதாக அறிவித்தது. டென்மார்க்கின் அரை தன்னாட்சி பிரதேசமான கிரீன்லாந்தை அமெரிக்கா கைப்பற்ற முயற்சிப்பதால் ஏற்பட்டுள்ள பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், இந்த அறிவிப்பு கவனம் ஈர்த்துள்ளது.
NORAD வெளியிட்ட அறிக்கையில், அந்த விமானங்கள் “விரைவில் அங்கு வந்து சேரும்” என்றும், நீண்ட காலமாக திட்டமிடப்பட்ட பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு உதவுவதற்காக அவை பயன்படுத்தப்படும் என்றும் தெரிவித்தது. “அமெரிக்கா மற்றும் கனடாவில் உள்ள தளங்களில் இருந்து இயக்கப்படும் விமானங்களுடன் சேர்ந்து, இவை அமெரிக்கா–கனடா மற்றும் டென்மார்க்கு அரசுகளுக்கிடையிலான நீண்ட கால பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும்,” என்று அந்த அமைப்பு தெரிவித்துள்ளது..
இந்த நடவடிக்கைகள் அனைத்தும் டென்மார்க்கு அரசுடன் ஒருங்கிணைக்கப்பட்டதாகவும், கிரீன்லாந்து அரசுக்கு முன்கூட்டியே தகவல் அளிக்கப்பட்டதாகவும் NORAD தெரிவித்தது. “இந்த நடவடிக்கைகள் டென்மார்க்கு அரசுடன் இணைந்து மேற்கொள்ளப்பட்டவை. தேவையான தூதரக அனுமதிகளுடன் அனைத்து படைகளும் செயல்படுகின்றன. கிரீன்லாந்து அரசுக்கும் இதுகுறித்து முன்பே தகவல் அளிக்கப்பட்டுள்ளது,” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
எந்த தேதியில் விமானங்கள் வந்து சேரும் என்பது குறித்து ராணுவம் தெளிவாக தெரிவிக்கவில்லை. ஆனால், கிரீன்லாந்து விவகாரத்தில் ஐரோப்பிய கூட்டணி நாடுகள் மீது டிரம்ப் அழுத்தத்தை அதிகரித்து வரும் நிலையில், இந்த ராணுவ நடவடிக்கையின் நேரம் அதிக கவனம் பெற்றுள்ளது.



