தமிழ்நாட்டில் ஏப்ரல் 23 ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதற்கிடையே பாஜக தேசிய தலைவர் நிதின் நபின் தஞ்சைக்கு வருகை தந்தார். இதனைத் தொடர்ந்து பாஜக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் இன்று (ஏப்ரல் 13 ஆம் தேதி) நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தஞ்சை தொகுதி பாஜக வேட்பாளர் முருகானந்தம், தஞ்சை மாவட்ட பாஜக தலைவர் ஜெய் சதீஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அதன்ப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய நிதின் நபின், “தமிழகத்தில் ஒரு குடும்பத்தின் ஆட்சி நடைபெற்று வருகிறது. ஊழல் அதிகரித்து வருகிறது. இந்த குடும்ப ஆட்சியை மக்கள் விரைவில் முடிவுக்கு கொண்டு வர விரும்புகின்றனர். நாடு முழுவதும் வளர்ச்சி பணிகள் முன்னேறிக் கொண்டிருக்கும் நிலையில், தமிழகத்தில் திமுக அரசு ஊழலில் முதன்மையானதாக உள்ளது எனவும் தெரிவித்தார்.
குறிப்பாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மற்றும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இருவரும் போட்டி போட்டுக் கொண்டு ஊழலில் ஈடுபட்டு வருவதாகவும் விமர்சித்தார். தொடர்ந்து இளைஞர்களை போதைப் பழக்கத்திற்கு தள்ளும் சூழல் தமிழகத்தில் உருவாகி வருகிறது. போதைப்பொருள் புழக்கம் கவலைக்குரிய அளவில் உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைந்தால் விவசாயிகளுக்கு உரிய பாதுகாப்பும் மரியாதையும் வழங்கப்படும் என உறுதியளித்தார். மேலும், ‘காசி தமிழ் சங்கமம்’ போன்ற நிகழ்வுகள் மூலம் தமிழ்ப் பண்பாட்டை உலகறியச் செய்தது மத்திய அரசு எனவும், ஆனால் தமிழக அரசு சனாதன மரபுகளை இழிவுபடுத்துகிறது எனவும் அவர் குற்றம்சாட்டினார்.
Read more: உஷார்.. OTP வராது.. ஆனால் வங்கிக் கணக்கு காலியாகிவிடும்.. புதிய இணைய மோசடி..!



