இன்றைய பரபரப்பான வாழ்க்கை முறையில் உடல்நலத்தை பேணுவது சவாலாக மாறியுள்ளது. நேரமின்மை காரணமாக பலர் உடற்பயிற்சியை புறக்கணித்து வருகிறார்கள். ஆனால், தினசரி நடைப்பயிற்சி என்பது எளியதும், மிகவும் பயனுள்ளதுமான ஒரு பழக்கமாக நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர். குறிப்பாக ஒரு நாளுக்கு குறைந்தபட்சம் 10,000 அடிகள் நடப்பது உடல்நலத்தை மேம்படுத்த உதவும் என்று கூறப்படுகிறது. ஆனால், வயதிற்கு ஏற்ப எவ்வளவு நேரம் நடக்க வேண்டும் என்பதையும் அறிந்திருக்க வேண்டும்.
18-30 வயது: 18 முதல் 30 வயதுக்குட்பட்டவர்கள் தினமும் குறைந்தது 30 முதல் 60 நிமிடங்கள் வரை நடைப்பயிற்சி மேற்கொள்ள வேண்டும். இந்த வயதில் உடல் எடை மாற்றங்கள் அதிகமாக இருக்கும். எனவே, இந்த அளவு நடைப்பயிற்சி உடல் எடையை கட்டுப்படுத்த, மன அழுத்தத்தை குறைக்க, மற்றும் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய நோய்களைத் தடுக்க உதவுகிறது.
31-50 வயது: 31 முதல் 50 வயதுக்குட்பட்டவர்கள் தினமும் 30 முதல் 45 நிமிடங்கள் நடைப்பயிற்சி செய்ய வேண்டும். இந்த வயதில் வேலைச்சுமை அதிகமாக இருக்கும் என்பதால், நடைப்பயிற்சி இதய நலத்தை பாதுகாக்கவும், சர்க்கரை மற்றும் ரத்த அழுத்தம் போன்ற பிரச்சினைகளின் அபாயத்தை குறைக்கவும் உதவுகிறது.
51-65 வயது: 51 முதல் 65 வயதுக்குட்பட்டவர்களுக்கு உடல் எதிர்ப்பு சக்தி குறையத் தொடங்கும். எலும்புகளும் பலவீனமடையும். எனவே, தினமும் 30 முதல் 40 நிமிடங்கள் நடப்பது அவசியம். இது எலும்பு வலிமையை மேம்படுத்தவும், உடல் சுறுசுறுப்பை பேணவும் உதவும்.
66-75 வயது: 66 முதல் 75 வயதுக்குட்பட்டவர்கள் உடல் சிரமங்களை கருத்தில் கொண்டு 20 முதல் 30 நிமிடங்கள் நடைப்பயிற்சி மேற்கொள்வது போதுமானது. இது உடல் இயக்கத்தைச் சீராக வைத்துக்கொள்ளவும், நோய்களைத் தடுக்கவும் உதவும்.
75 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதினர்: 75 வயதுக்கு மேற்பட்டவர்கள் தினமும் 15 முதல் 20 நிமிடங்கள் நடப்பது போதுமானதாகும். குறைந்தபட்சம் 15 நிமிடங்களாவது நடப்பது மனநலத்தையும் வாழ்க்கைத் தரத்தையும் மேம்படுத்தும்.
மொத்தத்தில், தினசரி நடைப்பயிற்சி உடல் எடையை கட்டுப்படுத்துகிறது, மன அழுத்தத்தை குறைக்கிறது, எலும்புகள் மற்றும் தசைகளை வலுப்படுத்துகிறது. மேலும், பல்வேறு நோய்களைத் தடுக்க உதவுகிறது. அலுவலக வாழ்க்கை கொண்டவர்கள் கூட, மின்தூக்கியை தவிர்த்து படிக்கட்டுகளைப் பயன்படுத்துவது, இடையே சிறிய நடைப்பயிற்சிகளைச் செய்வது போன்ற வழிகளில் இந்த பழக்கத்தை எளிதாகப் பின்பற்றலாம்.
Read more: ஜனநாயகன் நஷ்டத்தை ஈடுசெய்ய புதிய படத்தில் கமிட் ஆகும் விஜய்..? உண்மையை உடைத்த தயாரிப்பாளர்..!



