ஐபிஎல் 2026 தொடரில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டிக்குப் பிறகு, களத்தில் கிடைத்த வெற்றியை விட வெளியே பரவிய ஒரு வீடியோ தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சண்டிகரில் உள்ள முல்லன்பூர் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 223 ரன்கள் என்ற இலக்கை துரத்தி ஆறு விக்கெட் வெற்றியை பதிவு செய்தது.
யஷஸ்வி ஜெய்ஸ்வால், வைபவ் சூர்யவன்ஷி ஆகியோரின் அதிரடி தொடக்கமும், இறுதியில் டோனவன் ஃபெரேரா மற்றும் ஷுபம் துபே ஆகியோரின் நிலையான ஆட்டமும் அந்த வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தது. ஆனால் இந்த வெற்றிக்குப் பின்னர் சமூக வலைதளங்களில் வைரலான ஒரு வீடியோ தான் தற்போது விவாதத்தின் மையமாகியுள்ளது. அந்த வீடியோவில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் ரியான் பராக் ட்ரெஸ்ஸிங் ரூமில் ஒரு மின்னணு வேப்பிங் சாதனத்தை பயன்படுத்தி புகை இழுப்பது போன்ற காட்சி இடம்பெற்றுள்ளது.
அந்த நேரத்தில் சில சக வீரர்கள் அருகில் இருந்ததாகவும், இந்த காட்சி மறைமுகமாக பதிவு செய்யப்பட்டு பின்னர் சமூக வலைதளங்களில் வெளியானதாகவும் கூறப்படுகிறது. தற்போது இந்த வீடியோ X உள்ளிட்ட தளங்களில் வேகமாக பரவி ரசிகர்களிடையே கடும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. ஐபிஎல் விதிமுறைகளின்படி, ட்ரெஸ்ஸிங் ரூம் மற்றும் வீரர்கள் அமரும் பகுதிகளில் புகைபிடித்தல் அல்லது வேப்பிங் சாதனங்களை பயன்படுத்துவது தடைசெய்யப்பட்டதாகும்.
இதனால் இந்த சம்பவம் விதிமீறலாக கருதப்படலாம் என்ற கேள்வி எழுந்துள்ளது. மேலும், ஒரு அணியின் கேப்டனே இவ்வாறு நடந்துகொண்டதாக கூறப்படுவது, அணியின் ஒழுக்கம் மற்றும் தொழில்முறை நடத்தை குறித்து ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் வட்டாரங்களில் விமர்சனங்களை உருவாக்கியுள்ளது. இந்த விவகாரம் குறித்து பிசிசிஐ மற்றும் ஐபிஎல் நிர்வாகம் உள்மட்ட விசாரணை நடத்த வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
விதிமீறல் உறுதி செய்யப்பட்டால் எச்சரிக்கை, அபராதம் அல்லது போட்டித் தடை போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படலாம் என கிரிக்கெட் வட்டாரங்கள் கூறுகின்றன. இதற்கிடையில், ரசிகர்கள் சமூக வலைதளங்களில் இரு தரப்பாகப் பிரிந்து கருத்துகளை பகிர்ந்து வருவதால், இந்த விவகாரம் தற்போது ஐபிஎல் தொடரின் முக்கிய பேசுபொருளாக மாறியுள்ளது.
Read more: 3,000 கர்ப்பிணி பெண்களின் டேட்டா மிஸ்ஸிங்.. பெண் சிசு கொலை காரணமா..? அதிர்ச்சி ரிப்போர்ட்..



