தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்று முன்னிலை வகித்தாலும், ஆட்சியமைக்க இன்னும் சில எம்.எல்.ஏக்களின் ஆதரவு அவசியமான சூழல் நிலவுகிறது. விஜய் இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்றதால், நடைமுறையில் தவெக எம்.எல்.ஏக்கள் எண்ணிக்கை 107ஆக உள்ளது. ஆரம்பத்தில் 11 எம்.எல்.ஏக்களின் ஆதரவு தேவைப்பட்ட நிலையில், தற்போது இந்திய தேசிய காங்கிரஸ் 5 எம்.எல்.ஏக்கள் ஆதரவு வழங்கியதால், எண்ணிக்கை 112ஆக உயர்ந்துள்ளது. எனினும், இன்னும் 6 எம்.எல்.ஏக்களின் ஆதரவு அவசியமாக உள்ளது.
இந்த நிலையில், பட்டாளி மக்கள் கட்சி ஆதரவு அளிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த தேர்தலில் 17 தொகுதிகளில் போட்டியிட்ட பாமக, 4 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இதுகுறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் நேரடி பதில் அளிக்காமல் “வணக்கம்… நன்றி…” என்று கூறி விலகியிருப்பது அரசியல் வட்டாரங்களில் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
தவெக தரப்பில் இதுவரை பாமகவுக்கு நேரடி ஆதரவு கோரிக்கை விடுக்கப்படவில்லை. அதே நேரத்தில், நீண்ட காலமாக ஆட்சியில் பங்கு கோரி வரும் அன்புமணிக்கு, இம்முறை அதற்கான வாய்ப்பு உருவாகியிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. மேலும், விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளிடம் தவெக ஆதரவு கோரி கடிதம் அனுப்பியிருப்பது குறிப்பிடத்தக்கது. பாமக – விசிக இடையிலான நீண்டகால மோதலை கருத்தில் கொண்டு, தவெக பாமகவை தவிர்த்திருக்கலாம் என அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
Read more: BREAKING: தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி கன்பார்ம்.. உறுதி செய்த கிரிஷ் சோடங்கர்..! பரபர களம்..



