“ஜெயிலர் 2” திரைப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் மின்சாரம் தாக்கி 28 வயது இளைஞன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில், நடிகர் ரஜினிகாந்த் நடித்து வரும் இந்தப் படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு மற்றும் சில பேட்ச் வேலைகள் தற்போது பனையூரில் நடைபெற்று வந்ததாக கூறப்படுகிறது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் இந்தப் படம் பான் இந்தியா அளவில் மிகப் பெரிய நட்சத்திர பட்டாளத்துடன் தயாராகி வருகிறது.
இந்த நிலையில், படப்பிடிப்பு தளத்தில் வீடு போன்ற செட் அமைக்கும் பணிகள் நடைபெற்றபோது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியதில் 28 வயதான கார்த்திகேயன் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் காவல்துறையினர் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டுள்ளனர். விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
ரஜினிகாந்த், ரம்யா கிருஷ்ணன், ஷிவராஜ்குமார், மோகன்லால், பாலையா, விஜய் சேதுபதி, வித்யா பாலன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ள “ஜெயிலர் 2” திரைப்படம் பெரும் எதிர்பார்ப்பில் உருவாகி வரும் நிலையில், இந்த விபத்து படக்குழுவினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையில், கடந்த சில ஆண்டுகளாகவே தமிழ் சினிமா படப்பிடிப்பு தளங்களில் ஏற்படும் தொழில்நுட்ப மற்றும் ஸ்டண்ட் தொடர்பான விபத்துகள் தொடர்ச்சியாக விவாதப் பொருளாக இருந்து வருகின்றன. ஏற்கனவே “வேட்டுவம்” மற்றும் “சர்தார் 2” படப்பிடிப்புகளில் ஏற்பட்ட துயர சம்பவங்களும் இதேபோல் கவனம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
ஜெயிலர் 2 திரைப்படம் வரும் ஆகஸ்ட் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் விபத்துக் காரணமாக படபடிப்பில் இடை நிறுத்தம் ஏற்பட்டுள்ளதாகவும், வெளியீட்டு தேதி செப்டம்பர் மாதத்திற்கு ஒத்திவைக்கப்படலாம் எனவும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.



