தமிழ்நாட்டின் புதிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக பதவியேற்றுள்ள ராஜ்மோகன் அவர்களின் கல்வித்தகுதி தொடர்பாக தற்போது சமூக வலைதளங்களில் கடும் சர்ச்சை எழுந்துள்ளது. குறிப்பாக, அவரது பொறியியல் படிப்பு, டிப்ளோமா சான்றிதழ் மற்றும் தேர்தல் வேட்புமனுவில் குறிப்பிடப்பட்ட தகவல்கள் குறித்து பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன.
மாணவர்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் கல்வித்துறை அமைச்சரின் கல்வித்தகுதியே தற்போது கேள்விக்குறியாகி இருப்பது அரசியல் வட்டாரங்களிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பொறியியல் படிப்பில் அரியர் வைத்திருந்தாரா? சமூக வலைதளங்களில் பரவி வரும் தகவல்களின்படி, அமைச்சர் ராஜ்மோகன் சென்னை சாய்ராம் பொறியியல் கல்லூரியில் படித்ததாகவும், ஆனால் இன்று வரை சில அரியர் பாடங்களை முடிக்காமல் இருந்ததாகவும் கூறப்படுகிறது. தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்யப்படும் வேட்புமனு உறுதிமொழி ஆவணங்களில், அவர் தனது பொறியியல் படிப்பு குறித்த விவரங்களை குறிப்பிடவில்லை என்றும் கூறப்படுகிறது. இதுவே தற்போது சர்ச்சையை அதிகரித்துள்ளது.
அங்கீகாரம் இல்லாத நிறுவனத்தில் டிப்ளோமா? அமைச்சர் ராஜ்மோகன் டிப்ளோமா படித்ததாக கூறப்படும் சென்னை “இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மென்ட் அண்ட் டெக்னாலஜி” என்ற கல்வி நிறுவனமும் தற்போது சர்ச்சையில் சிக்கியுள்ளது. சமூக வலைதளங்களில் பரவி வரும் தகவலின்படி, அந்த நிறுவனத்திற்கு பல்கலைக்கழக மானியக் குழு, அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு அல்லது தமிழக தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் போன்ற அரசு அமைப்புகளின் அங்கீகாரம் இல்லை என கூறப்படுகிறது. இதனால், “அங்கீகாரம் இல்லாத நிறுவனத்தில் இருந்து சான்றிதழ் பெற்றாரா?” என்ற கேள்வி எழுந்துள்ளது.
7 ஆண்டுகள் தாமதம் ஏன்? அமைச்சர் தனது பன்னிரண்டாம் வகுப்பை முடித்த பல ஆண்டுகளுக்கு பின்னரே டிப்ளோமா சான்றிதழ் பெற்றதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கு காரணமாக பொறியியல் படிப்பில் இருந்த அரியர்களே என சிலர் குற்றம்சாட்டுகின்றனர். மேலும், “பணம் கொடுத்து சான்றிதழ் பெறும் வகை நிறுவனம்” என்ற குற்றச்சாட்டுகளும் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.
சட்ட சிக்கல் எழுமா? இந்த விவகாரம் தற்போது அரசியல் மட்டுமின்றி சட்ட ரீதியான விவாதமாகவும் மாறியுள்ளது. ஒருபுறம், “அவர் பொறியியல் படிப்பை முழுமையாக முடிக்கவில்லையா?” என்ற கேள்வி எழுகிறது. மறுபுறம், “படிப்பை முடித்திருந்தால், அதை ஏன் தேர்தல் வேட்புமனுவில் குறிப்பிடவில்லை?” என்ற கேள்வியும் எழுந்துள்ளது. தேர்தல் ஆவணங்களில் தவறான தகவல் அல்லது தகவல் மறைப்பு இருந்தது நிரூபிக்கப்பட்டால், அது சட்ட ரீதியான பிரச்சனையாக மாறக்கூடும் என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
ஸ்மிருதி இரானி விவகாரத்துடன் ஒப்பீடு: கடந்த காலத்தில் பாஜக மூத்த தலைவர் ஸ்மிருதி இரானி அவர்களின் கல்வித்தகுதி தொடர்பாக எழுந்த சர்ச்சையை போலவே, தற்போது அமைச்சர் ராஜ்மோகன் தொடர்பான விவகாரமும் பேசப்பட்டு வருகிறது. சமூக வலைதளங்களில் பலரும், “அங்கீகாரம் இல்லாததாக கூறப்படும் நிறுவனத்தில் படித்த ஒருவர், மாநிலத்தின் கல்வித்துறையை வழிநடத்துவது சரியா?” என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். ஆனால், இதுவரை இந்த குற்றச்சாட்டுகள் குறித்து அமைச்சர் ராஜ்மோகன் தரப்பில் அதிகாரப்பூர்வ விளக்கம் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.



