திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், தவெக தலைமையிலான அரசையும் அதிமுக எம்எல்ஏக்கள் தொடர்பான அரசியல் நகர்வுகளையும் கடுமையாக விமர்சித்தார். அப்போது பேசிய அவர், “அதிமுகவை ஊழல் கட்சி என்று கூறிவிட்டு, தற்போது அதே கட்சியின் எம்எல்ஏக்களின் ஆதரவை பெற முயற்சிப்பது எந்த வகையில் நியாயம்?” என்று கேள்வி எழுப்பினார்.
மேலும், அமமுக அல்லது அதிமுக எம்எல்ஏக்களுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டால் அது ‘குதிரைப் பேரம்’ என்ற சந்தேகத்தை உறுதிப்படுத்தும், அப்படி நடந்தால் சிபிஐ விசாரணை கோரப்படும் என்றும் எச்சரித்தார். தொடர்ந்து பேசிய தினகரன், “தவெகவின் ஆட்சியின் ஆயுட்காலம் தற்போது ஊசலாடிக் கொண்டிருக்கிறது. ஒரு அரசியல் கட்சியின் சட்டமன்றக் குழு நிர்வாகிகளை நியமிக்கும் அதிகாரம் அந்தக் கட்சித் தலைமையிடமே உள்ளது. அதிருப்தி எம்எல்ஏக்களுக்கு அமைச்சர் பதவி வழங்கினால், சிபுசோரன் வழக்கைப் போன்ற நிலை தவெக அரசுக்கும் ஏற்படும்.
இன்ஸ்டாவிலேயே ஆட்சி நடத்தலாம் என தவெக நினைக்கிறது. இன்ஸ்டா ரீல்ஸை பார்த்து வாக்களித்த மக்கள், தற்போது உண்மையான நிலையை பார்க்கும்போது வருத்தப்படுகிறார்கள். தவெகவை ஆதரித்த எம்எல்ஏக்கள் இறுதியில் ரோட்டில்தான் நிற்கப் போகிறார்கள். அதிமுகவை அழிக்க நினைக்கும் தவெகவுக்கு துணை போகும் செங்கோட்டையனை ஜெயலலிதாவின் ஆன்மா மன்னிக்காது. சட்டமன்றத்தில் கேள்வி கேட்டால், வீட்டுக்குச் சென்று அறிக்கை விடுகிறார். ஆட்சி அமைக்கும் வெறியில் ஒரு எம்எல்ஏவைக் கூட விட்டுவைக்காமல் தூக்குகிறார்கள்” என்று தினகரன் குற்றம்சாட்டினார்.



