கட்சியின் பொதுச்செயலாளரான எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக தொடர்ந்து செயல்பட்டு வந்ததாக கருதப்பட்ட நமது அம்மா நாழிதல் மற்றும் நியூஸ் ஜே தொலைக்காட்சி செய்தி போக்கு திடீரென மாறியிருப்பதாக அதிமுக நிர்வாகிகள் கூறுகின்றனர். இதுவரை இபிஎஸ் ஆதரவு செய்திகள் அதிக முக்கியத்துவம் பெற்றிருந்த நிலையில், தற்போது வெளியாகும் பதிப்புகளில் எடப்பாடி பழனிசாமியின் தலைமையை விமர்சிக்கும் செய்திகள் இடம்பெறத் தொடங்கியுள்ளன.
இதன் பின்னணியில் கட்சி ஊடகங்கள் வேலுமணி மற்றும் சி.வி. சண்முகம் கட்டுபாட்டுக்குள் சென்றதாக பேசப்படுகிறது. தற்போது அதிமுக எம்எல்ஏக்களில் ஒரு பகுதி எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாகவும், மற்றொரு பகுதி வேலுமணி – சி.வி. சண்முகம் அணிக்கு ஆதராவாகவும் இருப்பது அதிகாரப்பூர்வ ஊடகங்களிலும் பிரதிபலிக்க தொடங்கியது.
ஆனால், “நமது அம்மா” நாளிதழின் முகப்புப் பக்கத்தில் இன்னும் “நிறுவனர் – எடப்பாடி கே. பழனிசாமி” என்ற பெயரே இடம் பெற்று வருகிறது. இந்த நிலையில், அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடாக “போர்வாள்” வெளியிடப்பட்டிருப்பதும் முக்கிய கவனத்தை ஈர்த்துள்ளது. சென்னை பசுமைவழிச்சாலையில் உள்ள செவ்வந்தி இல்லத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், எடப்பாடி பழனிசாமி “போர்வாள்” நாளேட்டை அறிமுகப்படுத்தி வெளியிட்டார். அதிமுகவின் உள்கட்சி அரசியல் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், கட்சியின் அடுத்தகட்ட நகர்வுகள் தமிழக அரசியல் வட்டாரங்களில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.



