சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழக மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ள நிலையில், இந்த வழக்கு தொடர்பாக நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தமிழக காவல்துறையின் மூத்த அதிகாரிகள் சிரித்துக் கொண்டிருந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சமூக வலைதளங்களில் பரவி வரும் அந்தக் காணொளியை “மேக் அப்டேட்ஸ்” என்ற நிறுவனம் X தளத்தில் பகிர்ந்ததாக கூறப்படுகிறது. அதில், பெண் அதிகாரி ஒருவர் உட்பட மூன்று உயரதிகாரிகள் ஊடகங்களிடம் பேசும் போது சிரித்துக்கொண்டிருப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன. வீடியோவில் இடம்பெற்ற அதிகாரிகளில் ஒருவர் மேற்கு மண்டல ஐஜி எனவும் கூறப்படுகிறது.
இந்தக் காணொளி வெளியானதும் பலரும் கடும் கண்டனங்களை பதிவு செய்தனர். “ஒரு குழந்தையின் கொடூரமான மரணத்தை விசாரிக்கும் போது இப்படியா நடந்து கொள்வது?”, “இது காவல்துறையின் மனிதநேயமற்ற அணுகுமுறை” என பலர் சமூக வலைதளங்களில் விமர்சனம் செய்தனர். சிலர் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
ஒரு பயனர் காவல்துறை பொதுமக்களுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும்” என்று பதிவிட்டிருந்தார். மற்றொருவர், “இந்தக் கொடூர சம்பவத்திலும் அக்கறையில்லாத அதிகாரிகளுக்கு வெட்கமே இல்லையா?” என கேள்வி எழுப்பினார். “ஒரு நாகரிக சமூகமாக நாம் தோல்வியடைந்துவிட்டோம்” என்ற கருத்துகளும் பரவலாக பகிரப்பட்டன.
ஆனால் இதேவேளையில், சிலர் இந்தக் காணொளி செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் மூலம் மாற்றியமைக்கப்பட்டிருக்கலாம் என்றும் சந்தேகம் எழுப்பியுள்ளனர். “சமூக வலைதளங்களில் வெட்டித் தொகுக்கப்பட்ட வீடியோக்கள் வேகமாகப் பரவுகின்றன. முழுமையாகச் சரிபார்க்காமல் யாரையும் குற்றம் சாட்டக் கூடாது” என்று சிலர் பதிவிட்டுள்ளனர். மேலும் சிலர், “இது AI மூலம் உருவாக்கப்பட்ட போலி வீடியோவாக இருக்கலாம்” என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
இதுவரை இந்த வைரல் காணொளி குறித்து தமிழக காவல்துறை அதிகாரப்பூர்வ விளக்கம் எதையும் வெளியிடவில்லை. இதனால் சமூக வலைதளங்களில் விவாதம் மேலும் தீவிரமடைந்துள்ளது. இதற்கிடையில், வழக்கின் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்த 10 வயது சிறுமி திடீரென மாயமான நிலையில், பின்னர் அவரது உடல் குளம் அருகே கண்டெடுக்கப்பட்டது.
சிறுமி கழுத்தை நெரித்துக் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். மேலும் பாலியல் வன்கொடுமை நடைபெற்றிருக்கலாம் என குடும்பத்தினரும் அச்சம் தெரிவித்துள்ளனர். இந்த வழக்கில், நாகப்பட்டினத்தைச் சேர்ந்த தினக்கூலித் தொழிலாளி கார்த்திக் (33) மற்றும் மோகன்ராஜ் ஆகிய இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். சம்பவம் குறித்து தமிழக முதல்வர் சி. ஜோசப் விஜய் ஆழ்ந்த அதிர்ச்சி தெரிவித்ததுடன், இது “மனிதாபிமானமற்ற மற்றும் மன்னிக்க முடியாத குற்றம்” எனக் கண்டனம் தெரிவித்துள்ளார்.
Read more: கேஸ் பயனர்களுக்கு முக்கிய அலர்ட்..! ஜூன் 30-க்குள் இதைச் செய்யாவிட்டால், மானியம் நிறுத்தப்படும்..!



