மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அருகே 17 வயது சிறுவன் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் குற்றச்சம்பவங்கள் குறித்து மீண்டும் விவாதம் எழுந்துள்ளது. மாநிலத்தில் குற்றங்கள் குறைந்து வருவதாக காவல்துறை கூறினாலும், தினமும் சில கொலை சம்பவங்கள் பதிவாகி வருவது பொதுமக்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் கோவை சூலூரில் 10 சிறுமி கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியது..
இந்த நிலையில், மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அருகே 17 வயது சிறுவன் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. அதிகாலை நேரத்தில் நடந்த இந்த கொலை சம்பவம் மதுரை நகரையே அதிரவைத்துள்ளது.
சித்திரை திருவிழா காலத்தில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக குபேந்திரன் என்ற சிறுவன் குறிவைத்து கொலை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. முத்துமணி தலைமையிலான 5 பேர் கொண்ட குழு இந்த கொலையில் ஈடுபட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர்களில் முத்துமணி, ராஜ், சதீஷ்குமார், ஹரி கிருஷ்ணன் மற்றும் முத்துக்குமார் ஆகியோர் சேர்ந்து இந்த கொடூர சம்பவத்தை நிகழ்த்தியதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பான வீடியோவை பதிவிட்டு தமிழக முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சனம் செய்துள்ளார்.. தனது எக்ஸ் பக்கத்தில் “ இந்தக் காணொளியில் நீங்கள் காண்பது, மதுரையில் உள்ள மீனாட்சி அம்மன் கோவிலுக்கு அருகே, ஐந்து பேர் கொண்ட கும்பலால் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட ஒரு சிறுவனின் இரத்தக் கறைகளாகும்.
தமிழ்நாட்டில் போதைப்பொருள் விற்பனையாளர்கள், பாலியல் வன்கொடுமையாளர்கள் மற்றும் கொலைகாரர்கள் ஆகியோர் எவ்விதத் தடையுமின்றித் தப்பிவிடுகின்றனர்.
மாநிலக் காவல்துறை கடந்தகால நிகழ்வுகளிலிருந்து எவ்விதப் பாடத்தையும் கற்றுக்கொண்டதாகத் தெரியவில்லை; மேலும், புதிதாகப் பொறுப்பேற்றுள்ள தவெக அரசாங்கமும், தனது கொண்டாட்ட மனநிலையிலிருந்து இன்னும் வெளிவராமல், களத்தில் அரங்கேறிவரும் எதார்த்தங்களை எதிர்கொள்ளத் தவறிவருகிறது.” என்று குறிப்பிட்டுள்ளார்.



