மோசமான குதிரை பேர அரசியல்.. புதிய கரகாட்ட கோஷ்டிக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்.. தவெகவை விளாசிய இபிஎஸ்..!

vijay eps

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலுக்கு பின்னர் அதிமுகவில் கடும் உட்கட்சி மோதல் வெடித்துள்ளது.. முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம், சி. விஜயபாஸ்கர் தலைமையிலான அணி, கட்சியின் பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அணி என அதிமுக இரண்டாக பிளவுப்பட்டுள்ளது..


இந்த நிலையில். எஸ்.பி.வேலுமணி தரப்பில் இருந்த அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மரகதம் குமரவேல், ஜெயக்குமார், சத்யபாமா ஆகிய 3 எம்.எல்.ஏக்களும் இன்று தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர்.. மதுராந்தகம் எம்.எல்.ஏ மரகதம் குமரவேல், பெருந்துறை எம்.எல்.ஏ ஜெயக்குமார், தாராபுரம் எம்.எல்.ஏ சத்யபாமா ஆகியோர் சபநாயகர் ஜே.சி.டி பிரபாகரனிடம் தங்கள் ராஜினாமா கடிதங்களை வழங்கினர்.. ராஜினாமா செய்த கையோடு மூவர்ம் தவெகவில் தங்களை இணைத்துக் கொண்டனர்.. இதனால் அதிமுக எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை 44ஆக குறைந்துள்ளது..

இந்த நிலையில் அதிமுக எம்.எல்.ஏக்கள் 3 பேர் ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்ததற்கு அக்கட்சியின் பொதுச்செயலாளர் இபிஎஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.. இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் “ சுத்த சுயம்பிரகாச தூய சக்தி என்று தன்னைத் தானே அறிவித்துக்கொண்டு அரசியலில் குதித்த திரையுலகப் பிரபலம், மக்களின் முழுமையான ஆதரவு தனக்கு கிடைக்கவில்லை என்ற நிலையில், தான் அமைத்த பொய்க்கால் குதிரை ஆட்சியைக் காப்பாற்ற பல்வேறு தகிடுதத்த அரசியலில் ஈடுபட்டு வருவது வெட்கக்கேடான ஒன்றாகும்.

தமிழக அரசியல் வரலாற்றிலேயே இல்லாத வகையில், மோசமான ஒரு குதிரை பேர அரசியலை நடத்தி, தான் அமைத்த மைனாரிட்டி ஆட்சியைக் காப்பாற்றிக்கொள்ள முனைவது கண்டு தமிழக மக்கள் எள்ளி நகையாடுகின்றனர். தமிழ் நாட்டில் மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் 126 தொகுதி மக்கள் தனக்கு எதிராக வாக்களித்துள்ளார்கள் என்பதை சிறிதும் உணராமல், தான் எந்தக் கட்சியை தீய சக்தி என்று வருணித்து களமாடினாரோ அந்தக் கட்சியின் தயவில் வெற்றி பெற்ற ஒருசில கட்சிகளை தேடிப்போய் ஆதரவு கேட்டதும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற சில சட்டமன்ற உறுப்பினர்களை சோஃபாவோடு போய் ‘புஷ்பா’ பட பாணியில் ஆதரவு பெற்றதும் ஒரு நேர்மையான அரசியல்வாதியின் செயலா? என்று வாக்களித்த மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின்மீது விசுவாசம் கொண்டுள்ள உண்மைத் தொண்டர்களின் கடுமையான உழைப்பால், தியாகத்தால் வெற்றிபெற்ற 3 சட்டமன்ற உறுப்பினர்களிடமிருந்து, கோட்டையின் கீழ்தளத்தில் உள்ள சபாநாயகர் அறையில் ராஜினாமா கடிதம் எழுதி வாங்குவதும், அடுத்த 10 நிமிடத்தில் முதல் மாடியில் உள்ள த.வெ.க. அமைச்சர் ஒருவரின் அறையில் அவர்களுடைய கைகளில், கட்சி உறுப்பினர் அட்டை வழங்குவதும் முன்கூட்டியே திட்டமிடப்பட்ட ஓரங்க சதி நாடகத்தை, குதிரை பேரத்தை அம்பலப்படுத்தி உள்ளது.

தற்போதைய த.வெ.க. அரசின் இதுபோன்ற தகிடுதத்த வேலைகளை சந்திப்பது தமிழக அரசியலில் புதிதான அணுகுமுறையாகும். எத்தனையோ துரோகச் செயல்களையும், முதுகில் குத்திய நிகழ்வுகளையும் தாங்கித்தான் மக்கள் பணியாற்றி வருகிறது ‘அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்’ என்கிற மாபெரும் பேரியக்கம்.

இந்த அரசிற்கு முட்டு கொடுக்கக்கூடிய சட்டமன்ற உறுப்பினர்களாக இருந்தாலும், தற்போது ராஜினாமா செய்துள்ளவர்களாக இருந்தாலும், திரைப் பிரபலத்தின் சின்னத்திற்கு எதிராக மக்கள் வாக்களித்துதான் வெற்றி பெற்றுள்ளார்கள் என்பதை மறந்துவிடக்கூடாது. இதுபோன்ற துரோகச் செயல்களால் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை அசைத்துப் பார்க்கலாம்; வீழ்த்திவிடலாம்; அந்த இடத்திற்கு நாம் வந்துவிடலாம் என்று யாராவது நினைத்தால் அது பகல் கனவாகவே முடியும்.

ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறவில்லை’ என்பதுபோல, ‘பழைய மந்தையில் புதிய கள் என்பதுபோல, அடுத்தவர்களின் முதுகில் ஏறி பயணம் செய்வதில்தான் தங்களின் வாழ்வு இருக்கிறது என்று செயல்படும் புதிய கரகாட்ட கோஷ்டிக்கு தமிழக மக்கள் விரைவில் தக்க பாடம் புகட்டுவார்கள்.” என்று குறிப்பிட்டுள்ளார்..

Read More : “இது 100% குதிரை பேரம்.. தூய சக்தி என்று சொன்ன விஜய் இப்படி செய்யலாமா..?” அதிமுக எம்.பி. இன்பதுரை காட்டமான கேள்வி..!

RUPA

Next Post

தூயசக்தி இல்ல துயரசக்தி.. காங்கிரசின் போலி பாஜக எதிர்ப்பு பல்லிளிக்கிறது.. மு.க.ஸ்டாலின் சாடல்..!

Mon May 25 , 2026
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு விஜய் தலைமையிலான தவெக அரசு அமைந்துள்ளது.. நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் விஜய்யின் தவெக 108 இடங்களில் வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது.. எனினும் ஆட்சியமைக்க போதுமான பெரும்பான்மை கிடைக்காததால் திமுக கூட்டணியில் இருந்து வெளியேறிய காங்கிரஸ் தவெகவுக்கு ஆதரவு வழங்கியது. இதை தொடர்ந்து திமுக கூட்டணியில் இருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விசிக, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகள் […]
mk stalin joseph vijay jpg 1 1

You May Like