சமீபத்தில் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் தவெக வெற்றி பெற்று ஆட்சியை அமைத்த நிலையில், “விஜய் எளிதாக வெற்றி பெற்றுவிட்டார். அவர்மீது எனக்கு லேசா பொறாமை வந்துவிட்டது” என ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் கூறியுள்ளார்.
இதுகுறித்து பேசிய பவன் கல்யாண், “15 ஆண்டுகளாக நான் அரசியலில் இருந்து வருகிறேன். ஆனால் விஜய் பெற்றிருக்கும் அளவிலான வெற்றியை நான் பார்த்ததே இல்லை. ஹோலோகிராம் பிரச்சாரம், கட் அவுட்கள், ரசிகர் அலை போன்றவற்றின் மூலம் மிகப்பெரிய வெற்றியை அவர் பெற்றுள்ளார். மக்களின் எதிர்பார்ப்பை சரியாக புரிந்துகொண்டதால்தான் இது சாத்தியமானது” என தெரிவித்துள்ளார்.
மேலும், “தமிழகத்தின் அரசியல் சூழல் ஆந்திராவை விட முற்றிலும் வேறுபட்டது. சமூக மாற்றத்தை நோக்கமாக கொண்டு தான் நான் அரசியலுக்கு வந்தேன். அதிகாரத்தை விட சித்தாந்தம் மற்றும் கொள்கைகளுக்கே முக்கியத்துவம் கொடுக்கிறேன். தெலுங்கு தேசம் கட்சியுடன் கூட்டணி வைத்தது அந்த நேரத்தின் அரசியல் சூழ்நிலைக்கேற்ப எடுத்த முடிவு” என்றும் அவர் விளக்கியுள்ளார்.
அத்துடன், “சந்திரபாபு நாயுடு போன்ற ஒரு தலைவர் சிறையில் அடைக்கப்பட்ட சூழலில், மாநிலத்தின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு தான் கூட்டணி அமைக்கப்பட்டது. நாம் தனித்து போட்டியிட்டிருக்கலாம் என்ற கருத்தும் கட்சிக்குள் இருக்கிறது. மசூலிப்பட்டினம் கூட்டத்தில் மட்டும் 10 லட்சம் மக்கள் திரண்டிருந்தனர்” என்றும் பவன் கூறியுள்ளார்.
ஆனால் பவன் கல்யாணின் “விஜய் எளிதாக வெற்றி பெற்றார்” என்ற கருத்தே தற்போது சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பை சந்தித்து வருகிறது. தவெக தொண்டர்கள் மற்றும் விஜய் ரசிகர்கள் பலரும், “இந்த வெற்றிக்கு பின்னால் இருந்த உழைப்பை பவன் கல்யாண் முழுமையாக புறக்கணித்துள்ளார்” என குற்றம்சாட்டியுள்ளனர்.
“வெறும் ஹோலோகிராம், கட் அவுட் வைத்து யாரும் ஆட்சியை பிடிக்க முடியாது. கரூர் விவகாரம், பிரச்சார அனுமதி சிக்கல்கள், அமலாக்கத்துறை விசாரணைகள், குடும்ப வாழ்க்கையில் ஏற்பட்ட அழுத்தங்கள் என ஏராளமான சவால்களை சந்தித்த பிறகுதான் விஜய் இந்த வெற்றியை பெற்றுள்ளார்” என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பதிலடி கொடுத்து வருகின்றனர்.
Read more: முதல்வர் விஜய் நாளை டெல்லி பயணம்..! பரபரப்பான அரசியல் சூழலில் அதிரடி முடிவு..!



