கர்நாடக மாநிலம், தார்வார் மாவட்டம், நவல்குந்த் தாலுகாவில் உள்ள அனாசி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் 32 வயதான பசவராஜ். மல்யுத்த வீரரான இவருக்கு, 29 வயதான பிரியங்கா என்ற மனைவி உள்ளார். கலபுரகியைச் சேர்ந்த பிரியங்காவிற்கும் பசவராஜுக்கும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணமான நிலையில், தற்போது வரை குழந்தை இல்லை.
திருமணத்திற்குப் பிறகு, தான் புதிய தொழில் தொடங்க வேண்டும் என்று நினைத்த பசவராஜ், தனது மனைவியிடம் வரதட்சணை வாங்கி வருமாறு தொடர்ந்து வற்புறுத்தியுள்ளார். பசவராஜ் மட்டும் இல்லாமல், அவரது தாய் ரேணவ்வா, தந்தை சுரேஷ் மற்றும் தம்பி சித்தா ரமேஷ் ஆகியோரும் சேர்ந்து பிரியங்காவை துன்புறுத்தியுள்ளனர்.
மேலும், “நீ குண்டாக இருப்பதால் தான் உனக்கு குழந்தை இல்லை” என்று கூறி பசவராஜ் அடிக்கடி பிரியங்காவிடம் சண்டையிட்டு வந்துள்ளார். இந்நிலையில், வழக்கம் போல், நீ குண்டாக இருக்கிறாய் என்று கூறி கடந்த ஜூன் 29-ஆம் தேதி பசவராஜ் தகராறு செய்துள்ளார். ஒரு கட்டத்தில், ஆத்திரமடைந்த பசவராஜ், பிரியங்காவைச் சரமாரியாகத் தாக்கியுள்ளார்.
அதுமட்டும் இல்லாமல், தனது குடும்பத்தினரின் உதவியோடு பிரியங்காவின் கழுத்தை நெரித்துக் கொடூரமாகக் கொலை செய்துள்ளார். பிரியங்கா உயிரிழந்ததை அடுத்து, அவரது பெற்றோரைக் கூப்பிட்ட பசவராஜ், “உங்கள் மகள் உடல்நலக் குறைவால் இறந்துவிட்டார்” என்று நாடகமாடியுள்ளார்.
இதனால் பெரும் அதிர்ச்சியடைந்த பிரியங்காவின் பெற்றோர், உடனடியாக பசவராஜ் வீட்டிற்க்கு சென்றுள்ளனர். அப்போது தனது மகளின் உடலில் இருந்த காயங்களைக் கண்டு சந்தேகமடைந்துள்ளனர். இதையடுத்து, தனது மகளை கொலை செய்து விட்டதாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த போலீசார், பசவராஜ், அவரது தாய் ரேணவ்வா, தந்தை சுரேஷ் மற்றும் தம்பி சித்தா ரமேஷ் ஆகியோரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது, “மனைவியின் உடல் பருமன் காரணமாக அவர் கர்ப்பமாவதில் சிக்கல் நீடித்ததால், ஆத்திரத்தில் அவரைக் கழுத்தை நெரித்துக் கொலை செய்தோம்” என்று அவர்கள் ஒப்புக்கொண்டனர்.
இதையடுத்து, போலீசார் பசவராஜ் உட்பட அவரது குடும்பத்தினர் 4 பேரையும் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Also Read: மருமகள் மீது ஏற்பட்ட மோகம்… அதிகாலையில் நடந்த பரபரப்பு சம்பவம்!


