சமீபகாலங்களில் குடும்பப் பிரச்சினைகள் காரணமாக குடும்ப உறவுகள் சீர்குலையும் நிலை அதிகரித்து வருகிறது. முன்பு எந்தச் சூழ்நிலையிலும் குடும்பத்தினர் ஒன்றாக இருந்து பிரச்சினைகளை சமாளிக்கும் மனப்பான்மை இருந்தது. ஆனால் இன்றைய சூழலில் மன அழுத்தம், பொருளாதார சுமை மற்றும் மனநிலை பாதிப்பு போன்ற காரணங்களால் சிலர் தாங்க முடியாமல் தற்கொலை போன்ற தீவிர முடிவுகளை எடுத்துக் கொள்கிறார்கள்.
அதிலும் மிகவும் கவலைக்கிடமானது, சில நிகழ்வுகளில் தாய்மார்கள் தங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தைப் பற்றிய தவறான அச்சம் அல்லது மன அழுத்தத்தின் தாக்கத்தில், தங்கள் குழந்தைகளை கொன்று பின்னர் தற்கொலை செய்து கொள்ளும் துயரச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இப்படியான சம்பவங்கள் சமூகத்தை அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன. பெற்றோரின் பிரச்சினைகள் காரணமாக சிறு குழந்தைகள் உயிரிழப்பது மிகவும் வேதனையான நிலையாகும்.
அப்படியான ஒரு துயரச் சம்பவம் சமீபத்தில் பஞ்சாப் மாநிலத்தில் பதிவாகியுள்ளது. பஞ்சாப் மாநிலம் மான்சா நகரின் வார்டு எண் 3 பகுதியில், சந்தீப் கவுர் என்ற பெண் ஒருவர் வாடகை வீடு ஒன்றில் வசித்து வந்துள்ளார். இவருக்கு 2 மகள்கள் மற்றும் 1 மகன் ஆகிய 3 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், இவர் தனது வீட்டை விட்டு வெகுநேரமாகியும் வெளியே வராமல் இருந்துள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர் ஜன்னல் வழியே பார்த்துள்ளனர்.
அப்போது , சந்தீப் கவுர் மின்விசிறியில் தூக்கிட்டப்படி பிணமாக கிடந்துள்ளார். மேலும், அவரது 3 குழந்தைகளும் மிகக் கொடூரமான முறையில், கழுத்தை நெரித்துக் கொலை செய்யப்பட்டு கிடந்துள்ளனர். இதனால் பெரும் அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர், உடனடியாக இது குறித்து காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
தகவலின் அடிப்படையில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மான்சா சிட்டி 2 காவல் நிலைய போலீசார், உயிரிழந்த 4 பேரின் உடல்களையும் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காகச் சிவில் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், தடயவியல் நிபுணர்கள் சம்பவ இடத்திலிருந்து பல்வேறு முக்கிய ஆதாரங்களைச் சேகரித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பெற்ற தாயே தனது சொந்தக் குழந்தைகளைக் மிகவும் கொடூரமாக கொன்று விட்டுத் தற்கொலை செய்துக் கொண்ட இந்த நெஞ்சை உலுக்கும் சம்பவத்திற்கான அதிகாரப்பூர்வமான காரணம் இன்னும் முழுமையாகத் தெரியவில்லை. ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
இத்தகைய சம்பவங்கள் மனநலன் குறித்த விழிப்புணர்வின் அவசியத்தையும், குடும்பங்களில் ஏற்படும் பிரச்சினைகளை சரியான ஆலோசனை, ஆதரவு மற்றும் உதவியுடன் சமாளிக்க வேண்டிய தேவையையும் மீண்டும் வலியுறுத்துகிறது.
Also Read: பாத்ரூமுக்குள் மறைந்திருந்த மர்மம்… போலீசை அதிரவைத்த உண்மை!


