சில நாட்களுக்கு முன்பு, 18 மாத பிஞ்சு குழந்தையை ஒருவர் மீண்டும் மீண்டும் தரையில் தூக்கி வீசி கொடூரமாகக் கொலை செய்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்தச் சம்பவம் நாடு முழுவதும் கடும் கண்டனத்தையும் வேதனையையும் கிளப்பியது. இந்நிலையில், அந்தக் கொடூரச் செயலில் ஈடுபட்ட குற்றவாளிக்கு நீதிமன்றம் தக்க தண்டனையை விதித்துள்ளது. இந்தத் தீர்ப்புக்கு பலரும் வரவேற்பு தெரிவித்து, நீதி கிடைத்துள்ளதாக கருத்து பகிர்ந்து வருகின்றனர்.
உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்தவர் விராஜ். இவருக்கும் ஏற்கனவே திருமணம் ஆன இளம் பெண் ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்களின் பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இந்நிலையில், இருவரும் அடிக்கடி நேரில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். ஒரு கட்டத்தில், இவர் அந்த பெண்ணை திருமணம் செய்துக்கொள்ள முடிவு செய்துள்ளார்.
ஆனால் இவர்களின் திருமணதிற்கு தனது கள்ளக்காதலியின் 18 மாதக் குழந்தை ஆரவ் இடையூறாக இருப்பதாக விராஜ் கருதியுள்ளார். இதற்கு முடிவு கட்ட நினைத்த விராஜ், கடந்த மே 30-ஆம் தேதி அந்தக் குழந்தையைக் மிகவும் கொடூரமான முறையில் தூக்கித் தரையில் அடித்துக் கொலை செய்தார். இந்த நெஞ்சைப் பதறவைக்கும் கொடூரச் சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளியாகிப் பொதுமக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருந்தது.
இதையடுத்து, அம்மாநிலக் காவல்துறை மற்றும் நீதிமன்றம் மிகத் தீவிரமாகச் செயல்பட்டன. சம்பவம் நடந்த வெறும் 6 நாட்களுக்குள் காவல்துறை விசாரணையை முழுமையாக முடித்து, நீதிமன்றத்தில் வலுவான ஆதாரங்களுடன் குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்தது. அது மட்டும் இல்லாமல், வழக்கு விசாரணையைத் தினசரி அடிப்படையில் நீதிமன்றம் விரைவாக மேற்கொண்டது.
இதனால், சம்பவம் நடந்த 40 நாட்களுக்குள் அனைத்துத் தரப்பு வாதங்களையும் நிறைவு செய்தது. இதையடுத்து, காதலித்த பெண்ணைத் திருமணம் செய்ய நினைத்து பிஞ்சு குழந்தையைக் கொடூரமாகக் கொலை செய்த விராஜின் குற்றம், சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டது. இதனால், விராஜுக்கு மரண தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவைப் பிறப்பித்துள்ளது. குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவோருக்கு இந்தத் தீர்ப்பு ஒரு மிகச்சிறந்த பாடமாகவும், விரைவு நீதிக்கான உதாரணமாகவும் அமைந்துள்ளது எனச் சட்ட வல்லுநர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் தங்களின் கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.
Also Read: ‘அம்மாவ ஒண்ணும் பண்ணாதப்பா…’ கதறிய பிஞ்சு குழந்தைகள்; காரில் தந்தை செய்த காரியம்!



