உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் சல்மான் கான். இவருக்கு ஹசின் பானு என்ற மனைவியும், 3 குழந்தைகளும் உள்ளனர். இவர் தற்போது தனது குடும்பத்துடன் மராட்டிய மாநிலம் வாசிம் மாவட்டத்தில் வசித்து வருகிறார். இந்நிலையில், தனது மனைவி ஹசின் பானுவின் நடத்தையில் சல்மான் கானுக்கு சந்தேகம் இருந்துள்ளது. இதனால் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில், நேற்று மாலை சல்மான் கான் தனது மனைவி மற்றும் 3 குழந்தைகளுடன் வாசிம் மாவட்டம் கரஞ்ஜா பகுதிக்கு காரில் சென்றுள்ளனர். அப்போது கணவன் மனைவி இடையே வழக்கம் போல் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த சல்மான் கான், மனைவி ஹசின் பானுவை காரில் இருந்த இரும்பு கம்பியால் கடுமையாக தாக்கியுள்ளார். அது மட்டும் இல்லாமல், குழந்தைகளின் கண் முன்னே காரில் வைத்து மனைவி ஹசின் பானுவின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார்.
பின்னர், அதே காரில் தனது மனைவியின் சடலத்துடன் கரஞ்ஜா காவல் நிலையத்திற்கு சென்று சல்மான் கான் சரணடைந்துள்ளார். சடலத்துடன் காவல் நிலையத்திற்கு வந்த சல்மான் கானை பார்த்து போலீசார் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதையடுத்து, ஹசின் பானுவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போலீசார் சல்மான் கானை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
குழந்தைகளின் கண் முன்னே தாய் துடிதுடிக்க கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.



