தென்காசி மாவட்டம், கடையநல்லூர், வலசை, பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்தவர் 27 வயதான மகேந்திரன். கூலித்தொழிலாளியாக வேலை செய்து வரும் இவர் கடந்த ஜூலை 6ம் தேதி திடீரென மாயமாகி உள்ளார். இதனால் பதறிப்போன உறவினர்கள், அவரை பல இடங்களில் தேடியுள்ளனர். எங்கு தேடியும் அவர் கிடைக்காததால் சந்தேகம் அடைந்த மகேந்திரனின் மனைவி புவனேஸ்வரி, காவல் நிலையத்தில் புகார் அளிக்க முடிவு செய்துள்ளார்.
ஆனால் செல்போனில் புவனேஸ்வரியை தொடர்பு கொண்ட மகேந்திரனின் நண்பர்கள், மகேந்திரன் தங்களுடன் ஊட்டிக்கு சுற்றுலா வந்துள்ளதாக கூறியுள்ளனர். இதனை நம்பிய புவனேஸ்வரியும், தனது கணவரை தேடுவதை நிறுத்தியுள்ளார். ஆனால் சுமார் 10 நாட்கள் கடந்தும் மகேந்திரன் தனக்கு செல்போனில் கூட தொடர்புக் கொள்ளவில்லை என்று புவனேஸ்வரிக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, அவர் கடந்த 14ம் தேதி தனது கணவரை காணவில்லை என்று சேர்ந்தமரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார், தங்களின் விசாரணையை தொடங்கி உள்ளனர். அப்போது, மகேந்திரனின் இருசக்கர வாகனம் மேல கடையநல்லூர் – காசிதர்மம் செல்லும் சாலையில் இருந்து கண்டெடுக்கப்பட்டது. விசாரணையில், 3 சிறார்கள் உட்பட 4 பேர் சேர்ந்து மகேந்திரனை கொலை செய்து, உடலை கிணற்றில் வீசியதும் தெரியவந்தது.
இதையடுத்து, சிறார்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் மகேந்திரனின் உடலை மீட்டனர். மகேந்திரனின் சடலத்தில் பல கத்திக்குத்து காயங்கள் இருந்துள்ளது. மேலும், சடலத்தில் தலை காணவில்லை. இது குறித்து கேட்ட போது சிறுவர்கள் தலையை தனியே எடுத்து புதைத்ததாக கூறியுள்ளனர். பின்னர் அவரது தலையும் மீட்கப்பட்டது. தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், மகேந்திரனுக்கு மேல கடையநல்லூர் பகுதியில் வசித்து வரும் சிறுவனுடன் மதுபானம் அருந்தும் பழக்கம் இருந்துள்ளது.
சம்பவத்தன்று சிறுவனை மதுபானம் அருந்த அழைத்துச் சென்றவர், ஓரினசேர்கைக்கு வற்புறுத்தியுள்ளார். இதனால் சிறுவன் வேறொரு சிறுவனை உதவிக்கு அழைக்க, அங்கு தகராறு நடந்துள்ளது. பின் அவர் வேறொருவரை அழைக்க மொத்தமாக 3 சிறார்கள், ஒரு இளைஞர் என 4 பேர் கொலை சம்பவத்தை அரங்கேற்றி இருக்கின்றனர் என்பது அம்பலமானது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Also Read: தினமும் சாம்பாரே சமைத்த மனைவி… ஆத்திரத்தில் போலீசில் புகார் அளித்த கணவர்; நள்ளிரவில் நடந்த பரபரப்பு!



