இணைய பயன்பாடு அதிகரித்துள்ள நிலையில், ஆபாச இணையதளங்கள், சமூக வலைதளங்கள் மற்றும் போலி போலீஸ் அதிகாரிகள் பெயரை பயன்படுத்தி அச்சுறுத்தி பணம் பறிக்கும் சைபர் குற்றங்கள் நாடு முழுவதும் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக, “ஆபாச வீடியோக்கள் பார்த்துள்ளீர்கள்”, “உங்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது”, “உடனே கைது செய்யப்படுவீர்கள்” என பயமுறுத்தி பணம் கேட்கும் மோசடி கும்பல்கள், பொதுமக்களின் அச்சத்தை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி வருகின்றன. இதேபோன்ற சைபர் மோசடியில் சிக்கி, கோயம்புத்தூரைச் சேர்ந்த 50 வயது நபரிடம் ரூ.38 ஆயிரம் பறித்த வழக்கில், இரண்டு இளைஞர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
கோயம்புத்தூர் மாவட்டம், துடியலூர் பகுதியை சேர்ந்தவர் 50 வயதான ஜெகதீசன். சம்பவத்தன்று, மர்ம நபர் ஒருவர் ஜெகதீசனுக்கு தொடர்புகொண்டுள்ளார். அப்போது அவர், தான் பீளமேடு எஸ்.பி அலுவலகத்தில் இருந்து பேசுவதாகவும், நீங்கள் ஆபாச படம் பார்த்த காரணத்தால், உங்களை கைது செய்ய போகிறோம் என்று கூறியுள்ளார். மேலும், நீங்க ஆபாச படம் பார்த்ததற்கான ஆதாரங்களும் தன்னிடம் இருப்பதாக கூறியதால் ஜெகதீசன் அதிர்ச்சி அடைந்துள்ளார்.
மேலும், ஜெகதீசன் தான் எதையும் பார்க்கவில்லை என்று கூறியுள்ளார். அதற்கு அந்த மர்ம நபர், பணம் கொடுக்காவிட்டால் உங்களை கைது செய்யாமல் விடமாட்டோம் என கூறி மிரட்டியுள்ளார். இதனால் பதறிப்போன ஜெகதீசன் ரூ.38 ஆயிரம் பணத்தை அனுப்பி வைத்துள்ளார். பின் சில நாட்கள் கழித்து தனது நண்பரிடம் இதுகுறித்த தகவலை பகிரவே, அவர் ஜெகதீசன் ஏமாற்றப்பட்டதை தெரிவித்துள்ளார். பின் உண்மையை அறிந்த ஜெகதீசன் இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஜெகதீசன் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார், கோயம்புத்தூர் பச்சாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த 25 வயது சபரி மற்றும் 21 வயதான வினு ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
Also Read: “அது எப்படிமா நீ கர்ப்பமான?” கணவனுக்கே ட்விஸ்ட் வைத்த மனைவி… இறுதியில் வெளிவந்த அதிர்ச்சி உண்மை!



