போதைப்பொருள் விற்பனையாளர்கள், காவல்துறையிடம் சிக்காமல் இருக்க நாளுக்கு நாள் புதிய யுக்திகளை கையாளத் தொடங்கியுள்ளனர். அதிர்ச்சியளிக்கும் வகையில், ஆசிரியர் பணியில் இருந்த இரண்டு பெண்கள் போதைப்பொருள் விற்பனை வழக்கில் கைது செய்யப்பட்ட சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவில் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையாக காவல்துறையினர் ‘ஆபரேஷன் தூஃபான்’ என்ற சிறப்பு சோதனையை மேற்கொண்டனர்.
அந்த நடவடிக்கையின்போது ரிஸ்வான் என்பவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்தப்பட்ட தீவிர விசாரணையில், சர்வசிக்ஷா அபியான் திட்டத்தில் ஆசிரியர்களாக பணியாற்றி வந்த காவ்யா மற்றும் அவரது தோழி கீர்த்தனா ஆகியோருக்கு தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து இருவரையும் காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில், வாடிக்கையாளர்களிடம் QR Code மூலம் பணம் பெற்றுக்கொண்டு, போதைப்பொருள் மறைத்து வைக்கப்பட்டிருந்த இடத்தின் இருப்பிட விவரத்தை அனுப்பி, அங்கிருந்து எடுத்துச் செல்லும் முறையில் விற்பனை செய்து வந்தது தெரியவந்துள்ளது.
மேலும், இந்த சட்டவிரோத விற்பனையில் கிடைத்த பணம் காவ்யாவின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டதும் விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது. அந்த பணத்தை பயன்படுத்தி விலையுயர்ந்த ஆடம்பர கார் ஒன்றையும் வாங்கியிருப்பது அதிகாரிகளின் கவனத்திற்கு வந்துள்ளது. வாரத்தில் மூன்று நாட்கள் மட்டுமே ஆசிரியர் பணிக்கு செல்ல வேண்டியிருந்ததால், அந்த வேலையை மறைவாக பயன்படுத்தி போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டிருக்கலாம் என்ற கோணத்திலும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள காவ்யா மற்றும் கீர்த்தனா ஆகியோர் நீதிமன்ற உத்தரவின் பேரில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும், இந்த வலையமைப்பில் தொடர்புடைய மற்ற நபர்கள் யார், போதைப்பொருள் எங்கிருந்து பெறப்பட்டது, யாருக்கெல்லாம் விற்பனை செய்யப்பட்டது என்பது குறித்து காவல்துறையினர் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



