பிள்ளைகளை நல்ல மனிதர்களாக வளர்க்க வேண்டியது பெற்றோரின் மிகப்பெரிய பொறுப்பாகும். ஆனால், சில நேரங்களில் தவறு செய்தாலும் கண்டிப்பதற்கு பதிலாக, அவர்களுக்கு துணையாக நிற்கும் பெற்றோர்களும் இருக்கிறார்கள். இதுபோன்ற செயல்கள் குற்றங்களை தடுக்காமல், மேலும் மோசமான விளைவுகளுக்கு வழிவகுக்கின்றன. கோவையில், மகன் செய்த கொலையை மறைக்க தந்தையே உதவிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை – பொள்ளாச்சி நான்கு வழிச்சாலையில் கிணத்துக்கடவு அருகே உள்ள நல்லட்டிபாளையத்தில், தனியாருக்கு சொந்தமான காலி இடத்தில் சுமார் 30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் தீயில் எரிந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சடலமாக மீட்கப்பட்டார். இதுகுறித்து கிடைத்த தகவலின் பேரில் கிணத்துக்கடவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின் பேரில், தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடத்தப்பட்டது.
விசாரணையின் ஒரு பகுதியாக, சம்பவம் நடந்த பகுதி மற்றும் அதை சுற்றியுள்ள 120-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமரா பதிவுகள் ஆய்வு செய்யப்பட்டன. அப்போது, சம்பவ இடத்திற்கு ஒரு மோட்டார் சைக்கிள் பலமுறை வந்து சென்றது தெரியவந்தது. அந்த வாகனத்தின் பதிவு எண்ணை வைத்து போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர். இதில், அந்த மோட்டார் சைக்கிள் பொள்ளாச்சியை சேர்ந்த பழனிமுத்து (35) என்பவருக்கு சொந்தமானது என்பதும், அவருடன் அவரது தந்தை குருநாதன் (60) இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில், உயிரிழந்த பெண் பொள்ளாச்சி ஜமீன் கோட்டாம்பட்டியை சேர்ந்த சங்கீதா (30) என்பது தெரியவந்தது. சங்கீதா ஏற்கனவே திருமணமானவர். அதேபோல், பழனிமுத்துவும் திருமணமாகி இரண்டு மகன்களுக்கு தந்தையாக உள்ளார். இருவரும் ஒரே ஜவுளிக்கடையில் வேலை செய்தபோது பழக்கம் ஏற்பட்டு, பின்னர் அது கள்ளக்காதலாக மாறியுள்ளது. இந்த விவகாரம் பழனிமுத்துவின் மனைவிக்கு தெரியவந்ததால், கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதையடுத்து கடந்த மூன்று ஆண்டுகளாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர்.
இதற்கிடையில், இரண்டு மாதங்களுக்கு முன்பு சங்கீதாவும் தனது குடும்பத்தை விட்டு பிரிந்து, பழனிமுத்துவுடன் கிணத்துக்கடவு காமராஜர் நகரில் வாடகை வீட்டில் தங்கி வாழ்ந்து வந்துள்ளார். இந்த நிலையில், சம்பவத்தன்று இரவு இருவருக்கும் பணப்பிரச்சினை தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஏற்பட்ட ஆத்திரத்தில், பழனிமுத்து சுத்தியலால் சங்கீதாவை தாக்கியுள்ளார். பலத்த காயமடைந்த சங்கீதா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கொலையை மறைக்க, பழனிமுத்து தனது தந்தை குருநாதனுக்கு தகவல் தெரிவித்துள்ளார். பின்னர் இருவரும் சேர்ந்து சங்கீதாவின் உடலை சாக்குப்பையில் கட்டி, மோட்டார் சைக்கிளில் ஏற்றி தொழிற்சாலை அருகே உள்ள காட்டுப்பகுதிக்கு கொண்டு சென்றுள்ளனர்.
அதன்பிறகு, பெட்ரோல் வாங்கி வந்து உடலின் மீது ஊற்றி தீ வைத்து எரித்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். சம்பவத்துக்குப் பிறகு பழனிமுத்து வேலைக்கு செல்லாமல் தலைமறைவாக இருந்ததால் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் அவர் கொலையை ஒப்புக்கொண்டதாக போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து, பழனிமுத்துவையும், கொலையை மறைக்க உதவிய அவரது தந்தை குருநாதனையும் போலீசார் கைது செய்தனர். பின்னர் இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Also Read: கள்ளக்காதலனுடன் சேர்ந்து மனைவி செய்த காரியம்… நேரில் பார்த்த கணவர் செய்த கொடூர செயல்!



