40 வயதுக்கு பிறகு பெண்களின் உடலில் இயற்கையாகவே பல்வேறு ஹார்மோன் மாற்றங்கள் ஏற்படத் தொடங்குகின்றன. குறிப்பாக மாதவிடாய் நிற்கும் காலத்தை (Menopause) நெருங்கும் பெண்களுக்கு எலும்பு ஆரோக்கியம், இதய நலம், உடல் எடை மற்றும் மனநலம் தொடர்பான பிரச்சினைகள் அதிகரிக்கும் வாய்ப்பு இருப்பதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். மருத்துவ நிபுணர்கள் கூறுவதாவது, 40 வயதுக்கு மேல் பெண்கள் சோர்வு, மூட்டு வலி, தூக்கமின்மை, திடீர் உடல் எடை அதிகரிப்பு, அதிக வியர்வை, மனநிலை மாற்றம் போன்ற அறிகுறிகளை சாதாரணமாக எடுத்துக்கொள்ளக் கூடாது.
இவை உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களின் அறிகுறிகளாக இருக்கலாம் என்பதால், ஆரம்ப நிலையிலேயே மருத்துவரை அணுகுவது அவசியம் என வலியுறுத்துகின்றனர். மேலும், ஈஸ்ட்ரோஜன் (Estrogen) ஹார்மோன் அளவு குறைவதால் எலும்புகளின் அடர்த்தி குறைந்து, எலும்பு முறிவு அபாயம் அதிகரிக்கலாம். அதேபோல், உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு மற்றும் இதய நோய் போன்ற பாதிப்புகளுக்கான அபாயமும் வயதுடன் அதிகரிக்கக்கூடும் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
எனவே, 40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் ஆண்டுக்கு ஒரு முறையாவது முழு உடல் பரிசோதனை, ரத்த அழுத்தம், ரத்த சர்க்கரை, கொலஸ்ட்ரால் மற்றும் தேவைக்கேற்ப எலும்பு அடர்த்தி பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். குடும்பத்தில் மார்பகப் புற்றுநோய் அல்லது கருப்பை தொடர்பான நோய்களின் வரலாறு இருந்தால், மருத்துவரின் ஆலோசனையின்படி தேவையான பரிசோதனைகளையும் தவறாமல் செய்து கொள்ள வேண்டும் என்றும் கூறுகின்றனர்.
உணவில் கால்சியம், புரதம் மற்றும் வைட்டமின் D நிறைந்த உணவுகளை சேர்த்துக் கொள்வது, தினமும் குறைந்தது 30 நிமிடங்கள் நடைப்பயிற்சி அல்லது உடற்பயிற்சி செய்வது, போதுமான தூக்கம் மற்றும் மனஅழுத்தத்தை கட்டுப்படுத்துவது ஆகியவை இந்த வயதில் உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்க உதவும் முக்கிய வழிமுறைகளாகும். உடலில் ஏற்படும் சிறிய மாற்றங்களைக் கூட அலட்சியப்படுத்தாமல், சரியான நேரத்தில் மருத்துவ ஆலோசனையைப் பெறுவதன் மூலம் பல உடல்நலப் பிரச்சினைகளை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து கட்டுப்படுத்த முடியும் என்று மருத்துவர்கள் வலியுறுத்துகின்றனர்.
Also Read: குழந்தைகள் ஏன் காய்கறி சாப்பிட மறுக்கிறார்கள்? மருத்துவர்கள் கூறும் காரணம்!



