குறைந்த செலவில் அதிக புரதச்சத்து (Protein) கிடைக்கும் உணவுகளைத் தேடுபவர்களுக்கு சோயா சங்க்ஸ் (Soya Chunks) சிறந்த தேர்வாகும். உடற்பயிற்சி செய்பவர்கள், சைவ உணவு உண்பவர்கள், உடல் எடையை கட்டுப்பாட்டில் வைத்திருக்க விரும்புபவர்கள் என பலரும் இதை தங்கள் உணவில் சேர்த்து வருகின்றனர். புரதச்சத்து மட்டுமல்லாமல், நார்ச்சத்து, இரும்புச்சத்து மற்றும் உடலுக்குத் தேவையான பல்வேறு ஊட்டச்சத்துகளும் இதில் நிறைந்துள்ளன. சோயா சங்க்ஸை வைத்து சுவையாகவும், ஆரோக்கியமாகவும் செய்யக்கூடிய சில எளிய உணவுகள் குறித்து பார்க்கலாம்.
1. சோயா சங்க்ஸ் சாலட்
சோயா சங்க்ஸை வெந்நீரில் ஊறவைத்து வேகவைத்த பிறகு, வெள்ளரிக்காய், தக்காளி, வெங்காயம், கேரட், குடைமிளகாய் மற்றும் கொத்தமல்லியுடன் சேர்த்து கலக்கவும். அதில் எலுமிச்சை சாறு, மிளகுத்தூள் மற்றும் சிறிதளவு கருப்பு உப்பு சேர்த்தால் சுவையான சாலட் தயார். காலை உணவு, மாலை நேர சிற்றுண்டி அல்லது மதிய உணவுடன் சேர்த்து சாப்பிடலாம்.
2. சோயா சங்க்ஸ் புலாவ்
வெந்நீரில் ஊறவைத்த சோயா சங்க்ஸில் உள்ள தண்ணீரை நன்றாக பிழிந்த பிறகு, அரிசி, பட்டாணி, கேரட், பீன்ஸ் போன்ற காய்கறிகளுடன் சேர்த்து புலாவ் செய்யலாம். இதில் புரதச்சத்து, நார்ச்சத்து, கார்போஹைட்ரேட் மற்றும் வைட்டமின்கள் சமநிலையாக கிடைக்கும்.
3. சோயா சங்க்ஸ் டிக்கி
வேகவைத்த சோயா சங்க்ஸை பொடியாக நறுக்கி, வேகவைத்த உருளைக்கிழங்கு, துருவிய கேரட், கொத்தமல்லி மற்றும் தேவையான மசாலா பொருட்களுடன் கலந்து சிறிய வடை போல தட்டி, குறைந்த எண்ணெயில் இருபுறமும் பொன்னிறமாக வேக வைக்கலாம். இதை புதினா சட்னி அல்லது தயிருடன் சேர்த்து சாப்பிடலாம்.
4. சோயா சங்க்ஸ் புர்ஜி
வெந்நீரில் ஊறவைத்த சோயா சங்க்ஸை பொடியாக நறுக்கி, வெங்காயம், தக்காளி, குடைமிளகாய் மற்றும் மசாலா பொருட்களுடன் வதக்கி புர்ஜி செய்யலாம். இதை சப்பாத்தி, பரோட்டா, பிரெட் அல்லது ரோல் போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிடலாம்.
சோயா சங்க்ஸ் சமைக்கும்போது கவனிக்க வேண்டியவை
சோயா சங்க்ஸை சமைப்பதற்கு முன் 10 முதல் 15 நிமிடங்கள் வரை வெந்நீரில் ஊற வைக்க வேண்டும். பின்னர் அதிலுள்ள தண்ணீரை நன்றாக பிழிந்து எடுத்தால் அதன் இயல்பான வாசனை குறைந்து சுவையாக இருக்கும்.
அதேபோல், அதிக எண்ணெய் மற்றும் காரமான மசாலாக்களை தவிர்த்து, காய்கறிகளை அதிகமாக சேர்த்து சமைப்பது நல்லது. இதனால் நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் தாதுச்சத்துகளும் அதிகரிக்கும். மேலும், சமைத்த உணவை உடனுக்குடன் சாப்பிடுவது ஊட்டச்சத்துகளை முழுமையாகப் பெற உதவும்.
குறைந்த விலையில் அதிக புரதச்சத்து கிடைக்கும் உணவுகளில் சோயா சங்க்ஸ் முக்கிய இடம் வகிக்கிறது. உடல் எடையை குறைக்க, தசை வளர்ச்சியை மேம்படுத்த அல்லது ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தை பின்பற்ற விரும்புபவர்கள், இந்த எளிய சோயா சங்க்ஸ் உணவுகளை தினசரி உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.


