சமூக வலைதளங்களில் எழும் சிறிய விமர்சனங்களுக்குக் கூட காவல்துறை மூலம் வழக்குப் பதிவு செய்வதும், கைது நடவடிக்கைகளை மேற்கொள்வதும் துரதிருஷ்டவசமானது என முதலமைச்சர் விஜய்க்கு, ‘வீ த லீடர்ஸ்’ அமைப்பின் தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”ஆளுங்கட்சி என்ற அதிகார மமதையில் மக்களின் மாற்றுக்கருத்துகளையும் நியாயமான விமர்சனங்களையும் அலட்சியப்படுத்தியதே கடந்த காலங்களில் திமுக வீழ்ச்சியடைந்ததற்கான முதன்மைக் காரணம் என்பதைச் சுட்டிக்காட்டியுள்ளார். தற்போது தவெக அரசும் அதே பாதையில் பயணிக்கத் தொடங்கியுள்ளதோ என்ற தீவிர அச்சம் எழுந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ள அவர், கடந்த ஒரு மாதத்தில் மட்டும் ஆளுங்கட்சியினருடன் சமூக வலைதளங்களில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளுக்காக 25-க்கும் மேற்பட்டோர் மீது வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
குறிப்பாக, தனது குடும்பத்தினரை தகாத வார்த்தைகளால் விமர்சித்த தவெக தொண்டருக்குப் பதிலளித்த தங்களது அமைப்பின் தன்னார்வலர் ஒருவர் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்திருப்பது மிகுந்த கவலையளிப்பதாக கூறியுள்ளார். சமூக வலைதளங்களில் வரம்பு மீறிய தனிநபர் அவதூறுகளை கண்காணிப்பதில் தவறில்லை என்றாலும், அரசு மற்றும் ஆளுங்கட்சியின் செயல்பாடுகளை விமர்சிக்கும் ஒவ்வொரு குரலையும் அதிகாரத்தை கொண்டு நசுக்க முயல்வது ஜனநாயக மாண்புகளுக்கு உகந்தது அல்ல என எச்சரித்துள்ளார்.
மேலும், முதலமைச்சரை திருப்திப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் காவல்துறையினரும் அதிகார வர்க்கத்தினரும் தன்னிச்சையாக செயல்படுவதை அனுமதிக்கக் கூடாது என வலியுறுத்தியுள்ள அவர், விஜய் தற்போது ஒரு கட்சியின் தலைவர் மட்டுமல்லாது ஒட்டுமொத்த தமிழகத்திற்குமான பொதுவான முதலமைச்சர் என்பதை உணர வேண்டும் என்றார். ஜனநாயகத்தில் மாற்றுக் கருத்துக்களும் விமர்சனங்களும் தவிர்க்க முடியாத அங்கங்கள் என்பதை ஏற்றுக்கொண்டு, கருத்து சுதந்திரத்தை நசுக்கும் இத்தகைய நடவடிக்கைகளை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும்” என அண்ணாமலை கேட்டுக்கொண்டுள்ளார்.



