இன்றைய தலைமுறையில் பல பெற்றோர்கள், குழந்தைகளை கண்டிப்பதற்குப் பதிலாக அவர்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு, அமைதியாக வழிநடத்தும் முறையை பின்பற்றத் தொடங்கியுள்ளனர். குறிப்பாக Millennials மற்றும் Gen Z தலைமுறையைச் சேர்ந்த பெற்றோர்களிடையே Gentle Parenting எனப்படும் அணுகுமுறை அதிக கவனம் பெற்றுள்ளது. தாங்கள் சிறுவயதில் எதிர்கொண்ட கடுமையான அனுபவங்கள் குழந்தைகளுக்கும் ஏற்படக்கூடாது என்பதே இதன் முக்கிய நோக்கமாக உள்ளது.
ஆனால், குழந்தைகளுக்கு அதிக சுதந்திரம் கொடுப்பது போல இந்த அணுகுமுறை இருக்கிறதா என்ற விவாதமும் சமூக வலைதளங்களில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. உண்மையில் Gentle Parenting என்பது குழந்தைகள் விரும்பியபடி நடந்துகொள்ள அனுமதிப்பது அல்ல. மாறாக, குழந்தைகளின் வயதுக்கு ஏற்ற விதிகளை அமைத்து, அவர்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு, தவறான நடத்தைக்கான காரணத்தை விளக்கி சரியான வழியில் திருத்துவதே இதன் அடிப்படையாகும்.
குழந்தைகளுடன் வெளியில் செல்லும்போது, குறிப்பாக உணவகங்கள் போன்ற இடங்களில் அவர்கள் அடம்பிடிப்பது அல்லது அதிகமாக சத்தம் போடுவது பெற்றோருக்கு சிரமமாக இருக்கலாம். இதுபோன்ற சூழ்நிலைகளை சமாளிக்க சில எளிய வழிமுறைகளை ஒரு தாய் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.
அவரது அனுபவத்தின்படி, குழந்தைகளுடன் நீண்ட நேரம் வெளியே செல்லும்போது சிறிய அளவிலான தின்பண்டங்களை உடன் எடுத்துச் செல்வது உதவியாக இருக்கும். உணவு வருவதற்கு அதிக நேரம் எடுத்துக்கொண்டால் பசி காரணமாக குழந்தைகள் எரிச்சலடையலாம். அந்த நேரத்தில் சிறிய ஸ்நாக்ஸ் கொடுப்பதன் மூலம் குழந்தையின் பசியை சமாளித்து, தேவையற்ற அழுகை அல்லது கோபத்தைத் தவிர்க்க முடியும்.
அதேபோல், குழந்தைக்கு பிடித்த பொம்மை அல்லது புத்தகத்தை உடன் எடுத்துச் செல்வதும் பயனுள்ளதாக இருக்கும். நீண்ட நேரம் ஒரே இடத்தில் இருக்க வேண்டிய சூழலில், குழந்தைக்கு பிடித்த பொருள் அவர்களை அமைதியாகவும் ஆர்வமாகவும் வைத்திருக்க உதவும். சில நேரங்களில் குழந்தைக்கு முன்பு பார்த்திராத சிறிய பொம்மையை கொடுப்பதும் அவர்களின் கவனத்தை வேறு பக்கம் திருப்ப உதவும்.
குழந்தைகள் வளர வளர, தங்களுக்கு தேவையான பொம்மைகள் அல்லது புத்தகங்களை அவர்களே ஒரு சிறிய பையில் எடுத்துச் செல்லும் பழக்கத்தை உருவாக்கலாம். இதன் மூலம் வெளியே செல்லும்போது எப்படி தயாராக வேண்டும் என்பதையும் அவர்கள் படிப்படியாக கற்றுக்கொள்வார்கள்.
உணவகங்களில் குழந்தைகளை அமைதியாக வைத்திருக்க ஒவ்வொரு முறையும் மொபைல் போன் அல்லது டேப்லெட்டை கொடுப்பதை தவிர்ப்பதும் முக்கியம் என அந்த தாய் தெரிவித்துள்ளார். ஒவ்வொரு முறையும் வெளியே செல்லும்போது கேட்ஜெட்கள் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு குழந்தைகளிடம் உருவாகிவிடக்கூடாது என்பதே இதற்கான காரணம்.
அதே நேரத்தில், குழந்தைகள் எப்போதும் ஒரே மாதிரியாக நடந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. அதிகமாக சோர்வடைந்திருந்தாலோ, தூக்கம் இல்லாமலிருந்தாலோ அல்லது வேறு காரணங்களால் மனநிலை பாதிக்கப்பட்டிருந்தாலோ குழந்தைகள் திடீரென அடம்பிடிக்கலாம். அத்தகைய சூழலில் பெற்றோர்கள் தங்களைத் தாங்களே குற்றம் சாட்டாமல், குழந்தையின் நிலையைப் புரிந்துகொண்டு தேவையானால் அந்த இடத்தைவிட்டு வெளியேறுவதும் சரியான அணுகுமுறையாக இருக்கலாம்.
மேலும், குழந்தைகளை வெளியில் அழைத்துச் செல்லும்போது அவர்களுடன் தொடர்ந்து பேசுவதும், சுற்றியுள்ள விஷயங்களைப் பற்றி உரையாடலில் ஈடுபடுத்துவதும் நல்ல பழக்கத்தை உருவாக்கும். உணவகத்தில் மற்றவர்களுடன் அமர்ந்து பேசுவது, அவர்களின் பேச்சைக் கேட்பது போன்ற சமூக பழக்கங்களை இதன் மூலம் குழந்தைகள் இயல்பாக கற்றுக்கொள்ள முடியும்.
மொத்தத்தில், Gentle Parenting என்பது குழந்தைகளுக்கு எந்த விதிகளும் இல்லாமல் சுதந்திரம் கொடுப்பது அல்ல. அன்புடன் அணுகுவது, தெளிவான எல்லைகளை அமைப்பது, குழந்தையின் உணர்வுகளைப் புரிந்துகொள்வது மற்றும் அமைதியாக சரியான நடத்தையை கற்றுக்கொடுப்பது என்பதே அதன் அடிப்படை. வெளியில் குழந்தைகள் எதிர்கொள்ளும் சவால்களை பொறுமையுடன் கையாள்வதன் மூலம், அவர்களின் நடத்தையையும் படிப்படியாக மேம்படுத்த முடியும்.
Also Read: 4 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இந்த மருந்துகளை பயன்படுத்தக்கூடாது! மத்திய அரசு முக்கிய உத்தரவு!!!



