நள்ளிரவில் பாலத்தின் மீது தனியாக அமர்ந்து அழுது கொண்டிருந்த 3 வயது குழந்தையை பார்த்த பொதுமக்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. குழந்தையின் பெற்றோர் இருவரையும் காணவில்லை. தகவலறிந்து அங்கு சென்ற போலீஸார் குழந்தையை மீட்ட நிலையில், அவர்களைத் தேடியபோதுதான் கோதாவரி ஆற்றில் தம்பதியினர் குதித்தது தெரியவந்தது.
ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் இந்த துயரச் சம்பவம் நடந்துள்ளது. சாய் – சிரீஷா தம்பதிக்கு 3 வயதில் ஆண் குழந்தை உள்ளது. இருவரும் நேற்று நள்ளிரவு குழந்தையை அழைத்துக்கொண்டு பைக்கில் வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளனர்.
சிறிது நேரத்தில் கோதாவரி ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள பாலத்தை அவர்கள் அடைந்துள்ளனர். அங்கு பைக்கை நிறுத்திய சாய், குழந்தையை பைக்கிலேயே அமர வைத்துள்ளார். பின்னர் கணவன், மனைவி இருவரும் ஆற்றை நோக்கிச் சென்றுள்ளனர். அடுத்த சில நிமிடங்களில் இருவரும் பாலத்தில் இருந்து ஆற்றுக்குள் குதித்துள்ளனர்.
பெற்றோர் எங்கே சென்றார்கள் என்பது தெரியாமல் குழந்தை பைக்கில் தனியாக இருந்தபடி அழுதுள்ளது. அந்த நேரத்தில் பாலம் வழியாகச் சென்றவர்கள் குழந்தையின் அழுகை சத்தத்தைக் கேட்டு அருகில் சென்று பார்த்துள்ளனர். குழந்தை மட்டும் இருப்பதைப் பார்த்த அவர்கள் உடனடியாக போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.
விரைந்து வந்த போலீஸார் குழந்தையை மீட்டு பாதுகாப்பான இடத்துக்கு அழைத்துச் சென்றனர். அதேநேரத்தில், குழந்தையுடன் நிறுத்தப்பட்டிருந்த பைக்கையும் கைப்பற்றினர். பெற்றோர் இருவரையும் காணாததால், அவர்கள் சென்ற இடம் குறித்து விசாரணை மேற்கொண்டனர்.
இதில், சாய் மற்றும் சிரீஷா இருவரும் கோதாவரி ஆற்றில் குதித்திருக்கலாம் என்ற தகவல் போலீஸாருக்கு கிடைத்தது. இதையடுத்து ஆற்றில் அவர்களைத் தேடும் பணி தொடங்கியது. நீச்சல் வீரர்களின் உதவியுடன் தேடுதல் நடவடிக்கை நடைபெற்று வருகிறது.
தம்பதியினரின் இந்த முடிவுக்குப் பின்னால் கடன் பிரச்சினை இருந்தது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இருவருக்கும் கணிசமான கடன் இருந்த நிலையில், அதைத் திருப்பிச் செலுத்த முடியாமல் சிரமப்பட்டுள்ளனர். கடனை வசூலிக்க சிலர் அவர்களுக்கு தொடர்ந்து நெருக்கடி கொடுத்ததாகவும் போலீஸார் விசாரணையில் தகவல் கிடைத்துள்ளது.
கடன் சுமையால் ஏற்பட்ட மன அழுத்தத்தின் காரணமாக தம்பதியினர் இந்த விபரீத முடிவை எடுத்தார்களா என்பது குறித்து போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். ஆற்றில் நீர்வரத்து அதிகமாக இருப்பதால் சாய் மற்றும் சிரீஷாவை தேடும் பணியில் சிரமம் ஏற்பட்டுள்ளது. பெற்றோர் இருவரும் இல்லாத நிலையில், நள்ளிரவில் தனியாக மீட்கப்பட்ட 3 வயது குழந்தையின் நிலை அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Also Read: சின்னத்திரை நடிகை வினுஷா தேவிக்கு இன்று திருமணம்.. கணவர் யார் தெரியுமா?



