நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரில் காலில் ஏற்பட்ட எலும்பு முறிவுக்கு சிகிச்சை பெற்ற 7 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிகிச்சையில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக சிறுமியின் கால் கடுமையாக பாதிக்கப்பட்டு, பின்னர் கால் அகற்றப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்ததாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
பரமத்திவேலூரைச் சேர்ந்த சிறுமி கவிஷ்காவுக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. இதற்காக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில், காலில் போடப்பட்ட கட்டு இறுக்கமாக இருந்ததாகவும், அதன்பின்னர் சிறுமிக்கு கடுமையான வலி ஏற்பட்டதாகவும் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
நிலைமை மோசமடைந்ததை தொடர்ந்து சிறுமியை மேல்சிகிச்சைக்காக ஜிப்மர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு பரிசோதனை செய்தபோது, சிறுமியின் காலில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக திசுக்கள் கடுமையாக சேதமடைந்திருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து சிறுமியின் காலை அகற்றும் நிலை ஏற்பட்டுள்ளது.
கால் அகற்றப்பட்ட பின்னரும் சிறுமியின் உடல்நிலை கவலைக்கிடமாக இருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். தனியார் மருத்துவமனையில் அளிக்கப்பட்ட சிகிச்சையில் ஏற்பட்ட தவறே சிறுமியின் நிலை மோசமடைந்து உயிரிழப்பதற்கு காரணம் என குடும்பத்தினர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
இதையடுத்து சம்பந்தப்பட்ட மருத்துவரை கைது செய்ய வேண்டும், மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சிறுமியின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சிறுமியின் உடலை சாலையில் வைத்து அவர்கள் போராட்டம் நடத்தியதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Also Read: ஆபாச வீடியோவுக்கு அடிமை.. செல்போனில் 3,000 +..!! ஜன்னல் வழியாக எகிறி குதித்து செவிலியரை பலாத்காரம் செய்த கொடூரன்..!!



