திருச்சியில் முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் வீட்டைச் சுற்றி திமுக தொண்டர்கள் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே, அவரது வீடு உள்ளிட்ட தமிழகம் முழுவதும் 19 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் ஒரே நேரத்தில் சோதனை நடத்தி வருகின்றனர்.
காலை முதலே தில்லைநகர் பகுதியில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. நான்கு வாகனங்களில் வந்த லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் கே.என்.நேருவின் வீட்டுக்குள் சென்று சோதனையை தொடங்கினர். வீட்டில் இருந்த ஆவணங்கள் மற்றும் வழக்கு தொடர்பான முக்கிய தகவல்களை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
இந்த நடவடிக்கை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் கடந்த ஆட்சிக்காலத்தில் மேற்கொள்ளப்பட்ட பணிகளுக்கான டெண்டர் நடைமுறைகள் தொடர்பான வழக்கை மையமாகக் கொண்டுள்ளது. டெண்டர்களில் முறைகேடு நடந்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.
வழக்குடன் தொடர்புடையதாக கருதப்படும் அதிகாரிகளின் வீடுகளிலும் சோதனை நடைபெறுகிறது. சென்னை மயிலாப்பூர், அபிராமபுரம், திருச்சி மற்றும் கோவை உள்ளிட்ட பகுதிகளில் அதிகாரிகள் குழுக்களாக பிரிந்து சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
இதற்கிடையில், கே.என்.நேரு சோதனை நடைபெறும் நேரத்தில் லால்குடியில் இருந்தார். பின்னர் அவர் தில்லைநகர் இல்லத்திற்கு வந்தார். அவரது வருகையைத் தொடர்ந்து வீட்டின் முன்பு திமுக நிர்வாகிகளும் தொண்டர்களும் திரளத் தொடங்கினர்.
ஆதரவாளர்கள் அதிகளவில் கூடுவதால் அப்பகுதியில் போலீஸார் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளனர். கூட்டத்தால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படாத வகையிலும், அசம்பாவிதங்கள் நிகழாமல் தடுக்கும் வகையிலும் போலீஸார் கண்காணித்து வருகின்றனர்.
டெண்டர் முறைகேடு தொடர்பான ஆவணங்கள் மற்றும் பிற ஆதாரங்களை அதிகாரிகள் சோதனையின் மூலம் சேகரித்து வருகின்றனர். 19 இடங்களிலும் நடைபெறும் சோதனை நிறைவடைந்த பிறகு, வழக்கின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை முடிவு செய்யும்.
Also Read: சென்னையில் பயங்கரம்! நடுரோட்டில் ஓட ஓட வெட்டிக் கொலை செய்யப்பட்ட தவெக நிர்வாகி…



