மாமனாரின் படுக்கையறையில் நடந்த சம்பவம்.. சிசிடிவியில் பதிவான காட்சிகள்! போலீசில் சிக்கிய மருமகள்…

1e8468c9a1c20673177137ba613ecbe1cdb11ce38f903d0086c6e547abec046c

உத்தரப்பிரதேச மாநிலம், கான்பூரில் மருந்து நிறுவன அதிபர் ஒருவர் வீட்டின் படுக்கையறையில் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட வழக்கில், அவரது மருமகளே கொலைக்கு திட்டம் தீட்டியதாக போலீஸ் விசாரணையில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. ரூ.6 லட்சம் கொடுப்பதாகக் கூறி முன்னாள் வீட்டு ஊழியர் மூலம் கொலைக்கு ஏற்பாடு செய்ததாக மருமகள் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.


கான்பூர், கல்யாண்பூர் பகுதியில் உள்ள ரத்தன் ஆர்பிட் அடுக்குமாடிக் குடியிருப்பில் வினீத் மினோச்சா தனது மகன் சுப்ரத் மற்றும் மருமகள் ஷாலுவுடன் வசித்து வந்தார். பல கோடி ரூபாய் வருவாய் ஈட்டும் மருந்து நிறுவனத்தையும் அவர்கள் குடும்பமாக நடத்தி வந்தனர்.

சம்பவத்தன்று இரவு, சுப்ரத்தும் ஷாலுவும் வெளியே சென்றிருந்தனர். அதிகாலை சுமார் 3 மணியளவில் இருவரும் வீட்டுக்குத் திரும்பியபோது, வினீத் மினோச்சா தனது அறையில் ரத்தக் காயங்களுடன் சடலமாகக் கிடந்தார். இதைப் பார்த்த சுப்ரத் அதிர்ச்சியடைந்து போலீசாருக்கு தகவல் அளித்தார்.

வீட்டில் இருந்த பணம், நகைகள் உள்ளிட்ட பொருட்கள் கொள்ளையடிக்கப்படாதது போலீசாரின் சந்தேகத்தை அதிகரித்தது. இதையடுத்து, கொலை நடந்த வீட்டைச் சுற்றியிருந்த சிசிடிவி கேமராக்களின் காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர்.

அப்போது, வினீத் மினோச்சா வீட்டில் சுமார் 12 ஆண்டுகள் பணியாற்றிய விஷால் கௌதம் என்பவர் மற்றொரு நபருடன் நள்ளிரவில் வீட்டுக்குள் நுழைந்தது தெரியவந்தது. 2022-ம் ஆண்டு திருட்டுப் புகாரில் அவர் பணியில் இருந்து நீக்கப்பட்டிருந்ததும் விசாரணையில் தெரியவந்தது. வீட்டின் டூப்ளிகேட் சாவியை பயன்படுத்தியே இருவரும் உள்ளே நுழைந்ததாக போலீசார் கண்டறிந்தனர்.

விஷால் கௌதமை கைது செய்து விசாரணை நடத்தியபோது, கொலைக்குப் பின்னால் அதிர்ச்சிகரமான திட்டம் இருப்பது தெரியவந்தது. போலீசாரின் விசாரணையின்படி, வினீத் மினோச்சாவின் மருமகள் ஷாலுதான் கொலைக்கான திட்டத்தை வகுத்ததாக விஷால் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதற்காக அவருக்கு ரூ.6 லட்சம் வழங்குவதாக ஷாலு உறுதியளித்ததாகவும் விசாரணையில் தகவல் கிடைத்துள்ளது.

இதனைத் தொடர்ந்து ஷாலுவின் செல்போன் தொடர்பான தகவல்களையும் போலீசார் ஆய்வு செய்தனர். மே 1-ம் தேதி முதல் கொலை நடந்த நாள் வரை ஷாலுவுக்கும் விஷாலுக்கும் இடையே 309 முறை வாட்ஸ்அப் அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகள் பரிமாறப்பட்டிருந்ததாக சைபர் ஆய்வில் கண்டறியப்பட்டது. இதில் 49 உரையாடல்கள் அழிக்கப்பட்டிருந்ததும் விசாரணையில் தெரியவந்தது.

முதலில் வினீத் மினோச்சாவை தலையணையால் அழுத்திக் கொலை செய்து, அதை மாரடைப்பு என காட்ட திட்டமிட்டதாக போலீஸ் விசாரணையில் தகவல் கிடைத்துள்ளது. ஆனால் சம்பவத்தின்போது அவர் விழித்துக்கொண்டதால், திட்டம் மாற்றப்பட்டு கத்தியால் தாக்கியதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த தாக்குதலில் அவர் 26 முறை கத்தியால் குத்தப்பட்டு உயிரிழந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

கொலைக்கான காரணம் குறித்து ஷாலுவிடம் நடத்தப்பட்ட விசாரணையில், குடும்பத்தில் தனது செலவுகள் தொடர்பாக தொடர்ந்து கட்டுப்பாடுகள் இருந்ததாக அவர் தெரிவித்ததாக போலீசார் கூறியுள்ளனர். வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் மூலம் தனது நடவடிக்கைகள் கண்காணிக்கப்பட்டதால் ஏற்பட்ட அதிருப்தியும் கொலைக்கான காரணங்களில் ஒன்றாக இருந்ததாக விசாரணையில் தகவல் கிடைத்துள்ளது.

இந்த வழக்கில் ஷாலு மற்றும் கொலைக்கு உதவியதாக சந்தேகிக்கப்படும் நபர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. கொலைக்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதம், பணப் பரிமாற்றங்கள் மற்றும் சம்பவத்துக்கு முன்பும் பின்பும் நடந்த தொடர்புகள் குறித்தும் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

Also Read: சீனாவிடம் இந்தியா பணிந்து செல்கிறதா?.. பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் எழுப்பிய கேள்விகள்!

Saranya

Next Post

'ராமாயணம்' படத்தின் முதல் பாடல் வெளியீடு!. ஸ்ரேயா கோஷல், அரிஜித் சிங் குரலில் 'ஜெய் ஜெய் ராம்' பக்திப் பாடல்!

Mon Sep 14 , 2026
ரன்பீர் கபூர், யாஷ் மற்றும் சாய் பல்லவி நடிப்பில் உருவாகியுள்ள பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ‘ராமாயணம்’ படத்தின் டிரெய்லர் கடந்த ஜூலை மாதம் பிரம்ம முகூர்த்தத்தில் வெளியிடப்பட்டது. இந்நிலையில், விநாயகர் சதுர்த்தி திருநாளை முன்னிட்டு, இந்தப் புராணக் காவியத்தின் தயாரிப்பாளர்கள் ரசிகர்களுக்குச் சில சிறப்புப் பரிசுகளை வழங்கியுள்ளனர். அதன்படி, ரன்பீர் கபூர் ராமர் விறைவிலும், சாய் பல்லவி சீதையாகவும் தோன்றும் புதிய ‘சீதா ராம்’ போஸ்டரை இன்று காலை படக்குழு வெளியிட்டது. […]
Ramayana First Song

You May Like