சீனாவிடம் இந்தியா பணிந்து செல்கிறதா?.. பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் எழுப்பிய கேள்விகள்!

4c3ce1a2a4e00d6421639e5142b934d2f4281c60106153daf0709bf525299876

சீனாவுடனான உறவை இயல்பு நிலைக்கு கொண்டு வருவது வேறு; ஆனால் சீனாவிடம் இந்தியா படிப்படியாக விட்டுக்கொடுத்து வருவதாக காங்கிரஸ் கட்சி, பிரதமர் நரேந்திர மோடி மீது குற்றம்சாட்டியுள்ளது.


சீன அதிபர் ஷி ஜின்பிங்கை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்த மறுநாளில், காங்கிரஸ் இந்த விமர்சனத்தை முன்வைத்துள்ளது. இந்தியா – சீனா இடையேயான உறவுகள் மேம்படுவதற்கு, இரு நாடுகளின் எல்லைப் பகுதிகளில் அமைதியும், ஸ்திரத்தன்மையும் நீடிப்பது அவசியம் என ஷி ஜின்பிங்கிடம் பிரதமர் மோடி தெரிவித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து, காங்கிரஸ் பொதுச் செயலாளர் (தொடர்பு) ஜெய்ராம் ரமேஷ், பிரதமர் மோடியிடம் 4 கேள்விகளை எழுப்பியுள்ளார். சீனாவுடனான உறவை இயல்பு நிலைக்கு கொண்டு வருவது ஒரு விஷயம் என்றாலும், சீனாவிடம் இந்தியா திட்டமிட்டு பணிந்து செல்வது போன்ற நடவடிக்கைகள் பிரதமர் மோடியின் அணுகுமுறையில் வெளிப்படுவதாக அவர் விமர்சித்துள்ளார்.

2020-ம் ஆண்டு ஜூன் மாதம் கல்வான் பள்ளத்தாக்கில் சீன ராணுவத்துடனான மோதலில் 20 இந்திய வீரர்கள் உயிரிழந்தனர். இந்த சம்பவத்துக்குப் பிறகு, 2020 ஜூன் 19-ம் தேதி சீனாவுக்கு பிரதமர் மோடி வழங்கியதாக காங்கிரஸ் விமர்சிக்கும் “க்ளீன் சிட்”, இந்தியாவின் நிலைப்பாட்டை பலவீனப்படுத்தியதா என ஜெய்ராம் ரமேஷ் கேள்வி எழுப்பியுள்ளார்.

அப்போது, “இந்திய எல்லைக்குள் யாரும் நுழையவில்லை; தற்போது இந்திய எல்லைக்குள் யாரும் இல்லை” என பிரதமர் மோடி தெரிவித்த கருத்தை இதுவரை திரும்பப் பெறவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அந்தக் கருத்து, பின்னர் சீனாவுடனான பேச்சுவார்த்தைகளில் இந்தியாவின் நிலைப்பாட்டை பெரிதும் பலவீனப்படுத்தியதா எனவும் ஜெய்ராம் ரமேஷ் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், லடாக் மட்டுமின்றி, தற்போது அருணாச்சலப் பிரதேசத்திலும் சீனாவின் எல்லை நடவடிக்கைகளுக்கு மத்திய அரசு இடமளிப்பதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது. கிழக்கு லடாக்கின் பல பகுதிகளில் இந்தியா பாரம்பரியமாக பயன்படுத்தி வந்த ரோந்து மற்றும் மேய்ச்சல் உரிமைகள் படிப்படியாக கைவிடப்பட்டுள்ளதாக ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

அதேபோல், அருணாச்சலப் பிரதேசத்தில் இந்தியாவின் ரோந்து பகுதிகளுக்கான அணுகல் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், சீனாவுடன் புதிய மோதல் சூழல்கள் உருவாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அருணாச்சலப் பிரதேசம் தொடர்பான சீனாவின் நிலைப்பாடும் தொடர்ந்து கடுமையாகி வருவதாக காங்கிரஸ் தெரிவித்துள்ளது. இந்தியப் பகுதிகளுக்கு சீனப் பெயர்களை சூட்டுவது, அருணாச்சலப் பிரதேசத்தை “தெற்கு திபெத்” என உரிமை கோருவது, பிரம்மபுத்திரா நதியின் Great Bend பகுதியில் 60,000 மெகாவாட் திறன் கொண்ட Medog அணைத் திட்டத்தை முன்னெடுப்பது போன்ற நடவடிக்கைகளை சீனா மேற்கொண்டு வருவதாக ஜெய்ராம் ரமேஷ் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த அணைத் திட்டம், இந்தியாவின் ஒட்டுமொத்த வடகிழக்குப் பகுதியின் நீர்வளப் பாதுகாப்பில் சீனாவுக்கு அதிக செல்வாக்கை ஏற்படுத்தும் என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும், ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது பாகிஸ்தானுக்கு சீனா வழங்கிய ஆதரவு குறித்த இந்தியாவின் நிலைப்பாட்டிலும் மத்திய அரசு மென்மையான அணுகுமுறையை கடைப்பிடித்துள்ளதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது. இந்த விவகாரத்தில் ராணுவ உயரதிகாரிகள் வெளியிட்ட மாறுபட்ட கருத்துகளை சுட்டிக்காட்டிய ஜெய்ராம் ரமேஷ், சீன அதிபருடனான பிரதமர் மோடியின் சந்திப்புக்கு முன்பாக இரு நாடுகளுக்கும் இடையேயான சூழலை மாற்றும் ஒரு உத்தியாக இது இருந்ததா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதற்கிடையில், சீனாவுடனான இந்தியாவின் வர்த்தகப் பற்றாக்குறை 2025-26 நிதியாண்டில் 112.6 பில்லியன் அமெரிக்க டாலராக உயர்ந்துள்ளதாக காங்கிரஸ் சுட்டிக்காட்டியுள்ளது. இதனால் குறிப்பாக சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், முக்கிய மூலப்பொருட்கள், உற்பத்திக் கூறுகள் மற்றும் இடைநிலைப் பொருட்களுக்கு சீனாவை சார்ந்திருக்கும் நிலை ஆபத்தான அளவுக்கு அதிகரித்துள்ளதாகவும் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

“சீனாவுடனான வர்த்தகப் பற்றாக்குறை வரலாறு காணாத அளவுக்கு உயர அனுமதித்தது ஏன்?” என பிரதமர் மோடியிடம் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

Also Read: உடல் பருமன் சாதாரண பிரச்சினையல்ல! இந்தியர்களுக்கு அதிகரிக்கும் ஆபத்து குறித்து மருத்துவர்கள் எச்சரிக்கை!

Saranya

Next Post

மாமனாரின் படுக்கையறையில் நடந்த சம்பவம்.. சிசிடிவியில் பதிவான காட்சிகள்! போலீசில் சிக்கிய மருமகள்...

Mon Sep 14 , 2026
உத்தரப்பிரதேச மாநிலம், கான்பூரில் மருந்து நிறுவன அதிபர் ஒருவர் வீட்டின் படுக்கையறையில் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட வழக்கில், அவரது மருமகளே கொலைக்கு திட்டம் தீட்டியதாக போலீஸ் விசாரணையில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. ரூ.6 லட்சம் கொடுப்பதாகக் கூறி முன்னாள் வீட்டு ஊழியர் மூலம் கொலைக்கு ஏற்பாடு செய்ததாக மருமகள் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கான்பூர், கல்யாண்பூர் பகுதியில் உள்ள ரத்தன் ஆர்பிட் அடுக்குமாடிக் குடியிருப்பில் வினீத் மினோச்சா தனது மகன் […]
1e8468c9a1c20673177137ba613ecbe1cdb11ce38f903d0086c6e547abec046c

You May Like