தேர்வில் ChatGPT பயன்படுத்திய மாணவர் உயிரிழப்பு.. ஐஐடி பேராசிரியர் மீது வழக்கு!

dead body

ஐஐடி பாம்பே மாணவர் சாஹில் வகோடே உயிரிழந்த சம்பவத்தில், பேராசிரியர் சூர்யநாராயண் துல்லா மீது தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. முதல் தகவல் அறிக்கையில் மேலும் 2 பேர் அடையாளம் குறிப்பிடப்படாத குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கின் விசாரணை மும்பை காவல்துறையின் குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.


20 வயதான சாஹில் வகோடே, ஐஐடி பாம்பேவின் எரிசக்தி அறிவியல் மற்றும் பொறியியல் துறையில் இரண்டாம் ஆண்டு எம்எஸ்சி படித்து வந்தார். கடந்த வெள்ளிக்கிழமை மாலை, பவாய் வளாகத்தில் உள்ள விடுதி அறையில் அவர் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார்.

தேர்வின்போது சாஹில் செல்போனை பயன்படுத்தியதாகவும், கேள்வித்தாளை ChatGPT-ல் பதிவேற்றி பதில்களை பெற முயன்றதாகவும் ஐஐடி பாம்பே தெரிவித்துள்ளது. இருப்பினும், அவர் மீது எந்த ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும், பேராசிரியர் மற்றும் துறைத் தலைவர் அவருக்கு ஆலோசனை வழங்கி, இந்த சம்பவம் அவரது கல்வி எதிர்காலத்தை பாதிக்காது என்று உறுதியளித்ததாகவும் கல்வி நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன் பின்னர் அவர் விடுதி அறைக்குத் திரும்பிய நிலையில், மாலையில் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார்.

இதனிடையே, சாஹிலின் தந்தை ரவீந்திர சக்ரதர் வான்கடே காவல்துறையில் அளித்த புகார் வழக்கில் முக்கிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 3 மாதங்களாக தனது மகன் கடுமையான மனரீதியான துன்புறுத்தலுக்கும் சாதிய அவமதிப்புக்கும் ஆளானதாக அவர் புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

தேர்வின்போது கண்காணிப்பாளராக இருந்த பேராசிரியர் சூர்யநாராயண் துல்லா, இயக்குநர் ஷிரீஷ் பி. கேதாரின் அறிவுறுத்தலின் பேரில் தனது மகனை சாதிய ரீதியாக அவமதித்ததாக சாஹிலின் தந்தை குற்றம்சாட்டியுள்ளார். மேலும், தாழ்ந்த சாதியைச் சேர்ந்தவர் என்பதால் தன் மீது எளிதாக பொய் வழக்கு பதிவு செய்ய முடியும் என பேராசிரியர் தன்னை மிரட்டியதாக சாஹில் முன்பு தந்தையிடம் தெரிவித்திருந்ததாகவும் புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தனது மகனை தற்கொலைக்கு தள்ளியதில் பேராசிரியர் துல்லாவுக்கு முக்கிய பங்கு இருப்பதாக குற்றம்சாட்டியுள்ள தந்தை, பேராசிரியர் மற்றும் சம்பந்தப்பட்ட மூத்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரியுள்ளார்.

இதையடுத்து பாரதிய நியாய சன்ஹிதா (BNS), 2023-ன் கீழ் தற்கொலைக்கு தூண்டுதல் மற்றும் கூட்டு பொறுப்பு உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பட்டியலின அல்லது பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை அவமதிக்கும் அல்லது மிரட்டும் நோக்கில் சாதிய ரீதியாக இழிவுபடுத்தியதாக, எஸ்சி/எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

சாஹில் முதலாம் ஆண்டு படிப்பை எந்தப் பிரச்னையும் இல்லாமல் முடித்த நிலையில், இரண்டாம் ஆண்டு தொடங்கிய பின்னர் பிரச்னைகள் ஏற்பட்டதாக அவரது தந்தை புகாரில் தெரிவித்துள்ளார். தற்போது குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ள விசாரணையில், சாஹிலுக்கு ஏற்பட்டதாக கூறப்படும் துன்புறுத்தல், தேர்வு சம்பவம் மற்றும் அவரது உயிரிழப்புக்கு இடையிலான தொடர்பு குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஐஐடி பாம்பே வளாகத்தில் 7 மாதங்களில் நடந்த 3-வது தற்கொலை சம்பவம் இதுவாகும். கடந்த பிப்ரவரியில் இரண்டாம் ஆண்டு மாணவர் ஒருவர் விடுதி அறையில் உயிரிழந்தார். ஜூலை மாதம் 20 வயதான இரண்டாம் ஆண்டு பி.டெக் மாணவரும் உயிரிழந்தார்.

Also Read: அறக்கட்டளை பெயரில் நடந்த கொடூரம்?.. பங்களா வீட்டில் நடந்தது என்ன? ஜெம் வீரமணி வழக்கில் பகீர் பின்னணி

Saranya

Next Post

“கல்விக்கு நிதி இல்லை; ஆடம்பர செலவுக்கு மட்டும் முன்னுரிமையா?”.. பிரதமர் மோடியை சாடிய பவன் கேரா..

Sun Sep 20 , 2026
கல்வி மற்றும் மாணவர்களின் அடிப்படை வசதிகள் தொடர்பாக மத்திய அரசின் செலவின முன்னுரிமைகளை காங்கிரஸ் தலைவர்கள் விமர்சித்துள்ளனர். குறிப்பாக, உயர்கல்விக்காக கிராமங்களில் இருந்து நகரங்களுக்கு வரும் மாணவிகளுக்கு போதிய விடுதி வசதி இல்லாததால் ஏற்படும் பொருளாதார மற்றும் பாதுகாப்பு சிக்கல்களை ராகுல் காந்தி முன்வைத்துள்ளார். இதே விவகாரத்தில் காங்கிரஸ் மாநிலங்களவை உறுப்பினர் பவன் கேராவும் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசை விமர்சித்துள்ளார். காங்கிரஸ் மாநிலங்களவை உறுப்பினர் பவன் […]
bf1b6ab2bfd3eec004d804db2f10502702c1d7d762ddb209452041d7ebbd8d3f

You May Like