கல்வி மற்றும் மாணவர்களின் அடிப்படை வசதிகள் தொடர்பாக மத்திய அரசின் செலவின முன்னுரிமைகளை காங்கிரஸ் தலைவர்கள் விமர்சித்துள்ளனர். குறிப்பாக, உயர்கல்விக்காக கிராமங்களில் இருந்து நகரங்களுக்கு வரும் மாணவிகளுக்கு போதிய விடுதி வசதி இல்லாததால் ஏற்படும் பொருளாதார மற்றும் பாதுகாப்பு சிக்கல்களை ராகுல் காந்தி முன்வைத்துள்ளார். இதே விவகாரத்தில் காங்கிரஸ் மாநிலங்களவை உறுப்பினர் பவன் கேராவும் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசை விமர்சித்துள்ளார்.
காங்கிரஸ் மாநிலங்களவை உறுப்பினர் பவன் கேரா தனது எக்ஸ் பதிவில், அரசு மேற்கொள்ளும் விளம்பர மற்றும் பிரசார நடவடிக்கைகளுக்கான செலவுகளை சுட்டிக்காட்டி, இளைஞர்களின் கல்விக்கான அடிப்படை வசதிகளுக்கு போதிய முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை என குற்றம்சாட்டினார். பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கான உள்கட்டமைப்பு, தரமான ஆசிரியர்கள், பயிற்சி, மாணவர் விடுதிகள் மற்றும் வேலைவாய்ப்புகள் போன்ற துறைகளில் குறைபாடுகள் இருப்பதாக அவர் விமர்சித்தார்.
இந்த விவகாரத்தை தொடர்ந்து, காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியும் மாணவிகளின் விடுதி வசதி குறித்து மத்திய அரசிடம் கேள்வி எழுப்பியுள்ளார். செப்டம்பர் 19ஆம் தேதி மத்திய பிரதேசத்தின் இந்தூரில் நடைபெற்ற ‘Chhatron Ki Goonj’ நிகழ்ச்சியில் மாணவர்களுடன் ராகுல் காந்தி கலந்துரையாடினார். அப்போது, கிராமப்புறத்தில் இருந்து உயர்கல்விக்காக இந்தூருக்கு வந்த மாணவி ஒருவர் விடுதி வசதி இல்லாததால் தனியார் PG-யில் தங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக தனது கவலையை பகிர்ந்துள்ளார்.
விடுதி இல்லாததால் பாதுகாப்பான தங்குமிடத்திற்காக மாணவிகள் அதிக தொகையை செலவிட வேண்டியுள்ளது என்றும், மாத வாடகை மற்றும் எப்போது தங்குமிடத்தை இழக்க நேரிடுமோ என்ற அச்சத்துக்கு மத்தியில் படிப்பை தொடர வேண்டிய சூழல் இருப்பதாகவும் ராகுல் காந்தி தனது எக்ஸ் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தங்குமிட வசதி இல்லாத காரணத்தால் பல மாணவிகள் தங்களது படிப்பையே பாதியில் நிறுத்தும் நிலை உருவாகிறது என்றும் அவர் குறிப்பிட்டார். மாணவர்களுக்கு வழங்கப்படும் வீட்டு வாடகை உதவித்தொகை பணவீக்கத்துக்கு ஏற்ப உயரவில்லை என்றும், அதிலும் முறைகேடுகள் இருப்பதாகவும் ராகுல் காந்தி குற்றம்சாட்டினார். இந்த பிரச்னைகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி பதில் அளிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
மாணவர்களின் கல்வி, வேலைவாய்ப்பு, தேர்வுகள், ஆட்சேர்ப்பு மற்றும் விடுதி வசதிகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் ‘Chhatron Ki Goonj’ நிகழ்ச்சியில் முன்வைக்கப்பட்டன. கல்விக்கான உள்கட்டமைப்பு மற்றும் மாணவர் நலனுக்கான அரசு நடவடிக்கைகள் தொடர்பாக ராகுல் காந்தி பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார்.
Also Read: அறக்கட்டளை பெயரில் நடந்த கொடூரம்?.. பங்களா வீட்டில் நடந்தது என்ன? ஜெம் வீரமணி வழக்கில் பகீர் பின்னணி!



